குஜிலியம்பாறையில் அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரம்

*மண்பானை தொழிலாளர்கள் உற்சாகம்குஜிலியம்பாறை : எதிர்வரும் கார்த்திகை திருநாளை முன்னிட்டு, குஜிலியம்பாறையில் களிமண் அகல் விளக்குகள் செய்யும் பணியில் மண்பானை தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தமிழ்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் விழாக்களில், கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்று. அந்நாளில் வீடுகள் தோறும் அகல் விளக்கில் நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி ஒளி ஏற்றுவர். இந்த தீபத்திருவிழாவுக்காக குஜிலியம்பாறையில் களிமண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மெழுகுவர்த்தி, மின்சாரத்தில் இயங்கும் பல்புகள், லேசர் விளக்குள் என பல வந்தாலும், களி மண்ணால் செய்யப்படும் மண் விளக்குகளுக்கு இன்றளவும் மவுசு குறையாமல் இருப்பது நமது தமிழர்களின் கலாசாரத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதனை நம்பி தங்களது தொழிலை கைவிடாமல் செய்து வருகின்றனர் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள். அதன்படி, இத்தொழிலில் ஈடுபடுவோர் குஜிலியம்பாறை சாலையூரில் 15 குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் பரம்பரையாக மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலில் இருக்கும் ஒரு குடும்பத்தினர் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.இது குறித்து மண்பாண்ட தொழிலாளர் வேல்முருகன் (36) கூறுகையில், நான் 15 வயதில் இருந்து மண்பாண்ட தொழில் செய்து வருகிறேன். எனது தந்தைக்கு உறுதுணையாக இத்தொழிலில் இருந்து வருகிறேன். அது மட்டுமின்றி மூன்று தலைமுறையாக இத்தொழில் செய்து வருகிறோம். திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் அதிகளவில் விற்பனையாகும். கரூர், ஈரோடு, வெள்ளக்கோயில், காங்கேயம், மூலனூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆர்டர் கொடுத்து வியாபாரிகள் அகல் விளக்குகளை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கம். நாள் ஒன்றுக்கு 800 முதல் 1000 அகல் விளக்குகள் தயார் செய்ய முடியும். மழைகாலம் என்பதால் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் அவ்வப்போது தடைபடுகிறது. தொடர் மழை காரணமாகவும், போதிய அளவு வெயில் அடிக்காததாலும் உற்பத்தி செய்யப்பட்ட விளக்குகளை உலரவைக்க வழியில்லாமல் தடுமாறுகிறோம். அதனால் தற்போது தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக உற்பத்தி செய்யப்பட்ட அகல்விளக்குகள் மட்டுமே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டை விட இந்தாண்டு கார்த்திகை தீப தினத்திற்கு கரூர், ஈரோடு ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் அகல் விளக்குகள் உற்பத்தி செய்ய ஆர்டர் கொடுத்தனர்.ஆனால் தொடர் மழை மற்றும் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் எங்களால் தயார் செய்ய முடியவில்லை. ஒரு அகல் விளக்கு சில்லறை விற்பனையில் ரூ.2க்கும், மொத்த விற்பனையில் ரூ.1க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வருகிற டிச.6ம் தேதி திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது.இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், முன்னதாக உற்பத்தி செய்யப்பட்ட அகல் விளக்குகளே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்கு மழை பெய்யாமல் இருக்கும்பட்சத்தில், அகல் விளக்கு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்….

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு