குஜராத் கலவர கைதிகள் விடுதலை விவகாரம்; பில்கிஸ் பானுவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு அளித்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை சம்பவத்தின்போது, பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். அவரது குடும்பத்தினர் 7 பேர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகள், தங்களது தண்டனை காலம் முடியும் முன் தங்களை விடுதலை செய்யக்கோரி குஜராத் மாநில அரசிடம் முறையிட்டனர். இதன் அடிப்படையில் குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் மாநில அரசின் விடுதலை உத்தரவுக்கு எதிராக பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.அதில், ‘11 பேர் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டத்தின் தேவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவர்களை இயந்திரத்தனமான முறையில் மாநில அரசு விடுவித்துள்ளது. 1992ம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அனைவரும் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கொள்கையை 2003ம் ஆண்டே மாநில அரசு ரத்து செய்துவிட்டது. அப்படி இருக்கும்போது 11 பேரையும் 1992ம் ஆண்டு கொள்கையின்படி விடுவித்தது பொருத்தமானதா என்பதை ஆராய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிபதி பெலா எம்.திரிவேதி இந்த வழக்கிலிருந்து விலகினார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க வேண்டும் என்று பில்கிஸ் பானு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் விக்ரம் நாத் அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மறுசீராய்வு மனுவில் முகாந்திரம் இல்லை எனக்கூறி, பில்கிஸ் பானுவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்….

Related posts

திருச்சூரில் அடர்வனத்தைவிட்டு வெளிவந்த காட்டு யானை: மக்கள் குடியிருப்புகளில் புகுந்ததால் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!