கீழமணக்குடியில் உறவினரை அடித்து கொன்ற வழக்கில் இருவருக்கு ஆயுள்தண்டனை நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு

நாகர்கோவில், அக்.6: கீழமணக்குடியில் சொத்து தகராறில் உறவினரை கட்டையால் அடித்து கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கன்னியாகுமரி அருகே கீழமணக்குடி பழையகோயில் தெருவை சேர்ந்தவர் டீசன் (64). மீன்பிடி தொழில் செய்து வந்தார். டீசனின் சகோதரி மல்லிகா இறந்து விட்டார். இதனால், மல்லிகாவின் வீடு, அவரது மகன் தினேசிற்கு வழங்கப்பட்டது. இந்த வீட்டில் தினேஷ் வசித்து வந்தார். இதற்கு தினேசின் சகோதரி ராதிகாவின் கணவர் பிரபு, மல்லிகாவின் வீட்டை தினேசுக்கு கொடுக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையில், டீசன், தினேசுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில், பிரபு, தனது உறவினர் மற்றும் நண்பர்களுடன், சேர்ந்து டீசனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதன்படி, கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி இரவு, டீசன் வீட்டிற்கு சென்று, அவரை வெளியே பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதன்படி வெளியே வந்த டீசனை, பிரபு, ராஜ் உட்பட சிலர் சேர்ந்து, கட்டையால் அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து, பிரபு, ராஜ் உள்பட 5 பேர் மீது தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் மதியழகன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய், வழக்கில் பிரபு மற்றும் ராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், a 5 ஆயிரம் அபராதம் விதித்தும், மற்ற 3 பேரை விடுதலை ெசய்தும் தீர்ப்பு கூறினார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது