கீழடி அருங்காட்சியகத்திற்கு மாணவர்கள் செல்ல வேண்டும்: தமிழர் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

திருவாடானை,ஜன.19: கல்வித்துறை சார்பில் தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் செட்டி நாட்டு கட்டிட கலை பாணியில் 18 கோடியே 41 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு திறந்து வைத்தார்.

உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை காண பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள் தினமும் ஏராளமாக செல்கின்றனர். அருங்காட்சியகத்தில் உள்ள ஆறு கட்டிட தொகுதிகளிலும் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. மண்பானைகள், பானை ஓடுகள், நெசவு தொழிலில் பயன்படுத்தப்படும் தக்கழி, நெசவு குண்டு, தமிழ் பிராமி எழுத்துகள், இருவண்ண பானைகள், வெளிநாட்டு பாணி மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை மாணவ,மாணவிகள் பிரமிப்புடன் கண்டு வருகின்றனர்.

தமிழர்களின் பண்டைய வாழ்வியலை தெரிந்து கொள்ள ஆர்வம் மிக்க பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களை கீழடிக்கு அழைத்துச் செல்கின்றனர். இருப்பினும் இந்த பாரம்பரிய வரலாற்றையும் தமிழர்களின் பழம் பெருமையையும் அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே அரசு அனைத்து பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களையும் கீழடிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்து உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை