கீழடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: அகழாய்வில் கிடைத்த பொருட்களை பார்வையிட்டார்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று கீழடி சென்று அங்கு  அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று பகல் 12.30 மணியளவில் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடிக்கு சென்ற முதல்வர், அங்கு நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார். தற்போது வரை நடந்துள்ள ஏழு கட்ட அகழாய்வு பணிகள் குறித்து  அதிகாரிகளுடன் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.  இதனைத்தொடர்ந்து, அங்கு கூடாரம் அமைத்து 7ம் கட்ட அகழாய்வு வரை கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார். இங்கு கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, கருப்பு சிகப்பு பானை ஓடுகள்,  வெளிநாடுகளில் வணிகம் மேற்கொண்டதற்கான சான்றான வெளிநாட்டு மண் ஓடுகள், அலங்காரத்துடன் கூடிய சுடுமண் பொம்மைகள், சங்கு வளையல்கள், பருகுநீர் குவளை,  உழவிற்கு பயன்படுத்தும் கல்லாலான கருவி,  கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் குவளைகள், தங்க ஆபரண கம்பி, தங்க  அணிகலன், வெள்ளி முத்திரை நாணயம், யானை தந்தத்திலான பகடைக்காய், உறை கிணறுகள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட  தொன்மையான பொருட்களை சுற்றிப்பார்த்து, அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். இந்த பொருட்களை காட்சிப்படுத்த  ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கீழடி அரசு பள்ளி அருகே அருங்காட்சியகம்  கட்டப்பட்டு வருகிறது. அதுகுறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி,  பெரியகருப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி,  கீதாஜீவன், மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர்கள் ெதன்னவன், தமிழரசி  எம்எல்ஏ, சிவகங்கை கலெக்டர் மதுசூதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை