கிருஷ்ணராயபுரத்தில் அரசு இடம் தனி நபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

 

கிருஷ்ணராயபுரம், ஆக. 9: கிருஷ்ணராயபுரத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த அரசுக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தை அதிகாரிகள் நில அளவீடு செய்து நேற்று ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு பகுதியில் அரசுக்கு சொந்தமான 14 சென்ட் இடத்தை தனி நபர்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்துள்ளனர். மேலும், அப்பகுதி மக்கள் பொதுவழி பாதையாகவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்த தனி நபர்கள், பொதுமக்களை அவ்வழியாக செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் யுவராணி தலைமையில், சார் நில ஆய்வாளர் பெரியசாமி, குறுவட்ட நில அளவையர் கோகிலா ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, விஏஓ ஜெயலட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சசிகுமார், பட்டாயி, காமராஜ், பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

இந்நிலையில் தனி நபர்கள் ஆக்கிரமித்த இடத்தில் இருந்த சீமை கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, நில அளவீடு செய்யப்பட்டு கற்கள் ஊன்றப்பட்டன. அப்போது, அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு, பொதுப் பாதையை மீண்டும் அமைத்து தர வலியுறுத்தினர். இந்நிலையில், ‘அரசு இடத்தில் வசிக்கும் நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, காலி செய்ய வலியுறுத்தப்படும். அவர்கள் காலி செய்யாத பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்