கிருஷ்ணகிரி மாவட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி

 

கிருஷ்ணகிரி, ஏப்.25: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களை மேம்படுத்த, நீர் நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல மண்ணை இலவசமாக எடுத்து பயன்பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வண்டல், களிமண் என்பது தண்ணீர் நீரோட்டங்களின் மூலம் ஓடை, குளம், கண்மாய்களில் தேங்கும் மண் ஆகும். பண்டைய காலங்களில் இவ்வாறு சேகரிக்கப்படும் மண், விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், காலப்போக்கில் ரசாயன உரங்களின் பயன்பாட்டினால், நிலங்களுக்கு வண்டல் மண் பயன்படுத்தும் பழக்கம் மறைந்துவிட்டது. மேலும், வருடந்தோறும் கண்மாய்கள் கோடை காலங்களில் தூர்வாருவதால், கண்மாயில் சேகரிக்கப்படும் மழைநீர் நன்றாக உறிஞ்சப்படடு, நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்படும். விவசாயிகள் இவ்வாறாக சேகரிக்கப்படும் வண்டல் மண்ணை, தங்கள் நிலத்திற்கு பயன்படுத்துவதனால், நிலத்தின் ஈரத்தன்மை காக்கப்பட்டு, நிலத்தின் மண்வளம் மேம்பட்டு, ரசாயன உர பயன்பாட்டினை குறைக்க வழி வகுக்கும்.

இதனை கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 153 ஏரிகளில் களிமண், வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது புதியதாக 43 ஏரிகளில் இருந்து களிமண், வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக, கலெக்டரால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நஞ்சை நிலங்களாக இருப்பின் ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடு வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களாக இருப்பின் 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், வண்டல் மண், சவுடுமண், கிராவல் போன்ற கனிமங்களை வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடு, மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களும் 60 கனமீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடு என்ற அளவில் மண் எடுத்துக்கொள்ளலாம்.

விவசாயிகள் மண் எடுப்பதன் மூலம் ஏரிகள், குளங்கள் போன்ற நீர் ஆதாரப்பகுதிகளை தூர்வாரி ஆழப்படுத்தி, கரைகள் உயர்த்தப்படும். மேலும், வரும் பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க ஏதுவாக அமையும். இதன் மூலம் விவசாயத்தை பெருக்கி மண்வளம் காத்து, பசுமைப்புரட்சியை ஏற்படுத்த முடியும். விவசாயம், வீட்டு உபயோகம், மண்பாண்டம் செய்வதற்கு தேவையான வண்டல் மண், சவுடு மண், கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக எடுத்து பயன்படுத்த விரும்பும் நபர்கள், தங்கள் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி, கண்மாய், குளம் அல்லது அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஏரி, கண்மாய், குளம் குறித்த கிராம கணக்குகளுடனும் மற்றும் உரிய ஆவணங்களுடனும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று வருவாய் கோட்டாட்சியரிடமோ, வருவாய் வட்டாட்சியரிடமோ, வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ, பொதுப்பணித்துறை அலுவலரிடமோ, கனிம வளத்துறை அலுவலரிடமோ, வேளாண்மை விரிவாக்க மைய அலுவலரிடமோ, மாவட்ட கலெக்டரிடமோ விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், தங்கள் கிராமத்தில் உள்ள ஏரியின் பெயர் அல்லது அருகில் உள்ள ஏரியின் பெயர், வெளியிடப்பட்ட மாவட்ட அரசாணையில் இடம் பெற்றுள்ளதா என்று தெரிந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் கனிம வளத்துறை அலுவலகம் போன்ற அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள தகவலை பார்த்து தெரிந்துகொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை