கிராம மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் சுருக்கு மடி வலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்

திருப்போரூர்: கோவளத்தில் நடந்த, கிராம மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில், சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை திருவான்மீயூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக்காடு, கோவளம், நெம்மேலி, மாமல்லபுரம் உள்ளிட்ட 16 கிராம மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கோவளத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பேசிய பல்வேறு கிராம மீனவர்கள் அரசு விதித்துள்ள தடையை மீறி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களில் ஒரு பிரிவினர் விசைப்படகுகளில் சுருக்கு மடி வலை, இரட்டை மடி வலை, இழுவை வலை ஆகியவற்றை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால், சிறிய நாட்டுப்படகு, சிறிய விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் கூறினர். பெரிய படகுகளில் செல்லும் மீனவர்கள் இந்த வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்து படகுகளில் ஏற்ற முடிந்த அளவிற்கு மீன்களை எடுத்துக் கொண்டு இறந்த மீன்களை அப்படியே கடலில் கொட்டி விடுவதாகவும் இதனால் கடலின் தன்மை பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர். மாநில அளவில் மீன் வளத்துறை இந்த வலைகளை பயன்படுத்த தடை விதித்து இருப்பதாகவும் ஆனால், தடையை மீறி சட்ட விரோதமாக உயர்நீதிமன்ற உத்தரவு ஒன்றை காட்டி சிலர் இந்த தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி வருகின்றனர் என கூட்டத்தில் பேசிய மீனவர்கள் குற்றம் சாட்டினர். சிறிய அளவிலான தொழில் செய்யும் மீனவர்கள் இதனால் வாழ்வாதாரம் இழந்து கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு படகில் மீன் பிடிக்கச் செல்லும் நான்கு மீனவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் கூட இதன் காரணமாக கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஆகவே, தமிழக அரசு இரட்டை மடி வலை, சுருக்கு வலை, இழுவை வலைகளை பயன்படுத்த நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் இதுபற்றி தமிழக அரசு சார்பில் வாதிட்டால் மீனவர்கள் தரப்பு நியாயத்தை முன் வைக்க தயாராக இருப்பதாகவும் மீனவர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து அனைத்து மீனவர்களும் இணைந்து இதற்கான தீர்மானத்தில் கையொப்பமிட்டு அரசுக்கு அனுப்பி வைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது….

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது