கிராம ஊராட்சிகளுக்கு வளம் சேர்க்கும் திட்டம்; தமிழக அரசின் நடவடிக்கையால் காக்கப்படும் நிலங்கள்: அசத்தும் பூவாணிகுப்பம் மக்கள்

கடலூர்: கிராம ஊராட்சிகளில் உள்ள தரிசு மற்றும் புறம்போக்கு நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமை பூங்கா திட்டத்தால் ஊராட்சி வளர்ச்சிக்கும் விவசாயிகளுக்கும் வளம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னோடி திட்டமாக தமிழக அரசின் சார்பில் கடலூர் மாவட்டம் பூவாணிகுப்பம் ஊராட்சியில் பசுமை பூங்கா திட்டத்தில் கிராம மக்கள் அசத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஊராட்சிகளின் செயல்பாட்டில் விவசாயிகளுக்கு வளம் சேர்க்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராம ஊராட்சிகளில் அடிப்படை பிரச்னைகளாக தரிசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை அமைந்துள்ளது. இதனை மாற்றியமைக்கும் வகையில் கிராமங்களுக்கு பயன்தரும் திட்டமாக பசுமை பூங்காக்கள் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டமான கடலூர் மாவட்டத்தில் முன்னோடி கிராமமாக பூவாணிகுப்பம் கிராமம் அமைந்துள்ளது. கால்நடை வளர்ப்பு, ஏரி, குளங்களில் மீன் வளர்ப்பு என செழித்திருக்கும் இக்கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு பசுமை பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கால்நடை தீவனம் வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு, பழத்தோட்டங்கள், பல்வேறு வகை பயன் தரும் மரங்கள், பூங்கா, நாற்று வகைகள் தயாரித்தல் என பூவாணிகுப்பம் ஊராட்சியில் மீட்கப்பட்ட 9 ஏக்கர் நிலத்தில் திட்டத்தின் வாயிலாக அப்துல் கலாம் பெயரில் பசுமை பூங்கா செயல்படுத்தப்படுகிறது. பூங்காவின் வளம் ஊராட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் கிராம மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன் தரும் நிலைப்பாட்டில் கொண்டு செல்லப்படுகிறது. பசுந்தீவனம் ஊராட்சியில் உள்ள கால்நடை வளர்ப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பழ மற்றும் காய்கறி சாகுபடி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் அக்கிராம மக்களை கொண்டே சாகுபடி செய்யப்பட்டு விற்பனையின் மூலம் ஊராட்சியின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிகாட்டுகிறது. விவசாயிகளுக்கு பூங்காவில் பணி வாய்ப்பு  மூலம் தினக்கூலி, சாகுபடியின் மூலம் ஊராட்சிக்கு பொருளாதார வரவு என பயன்தரும் வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நன்னீர் மீன் வளர்ப்பு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக கால்நடை தீவனம், மரக்கன்றுகள் தற்போது செழித்து வளர்ந்துள்ளன. இதுபோன்று பல்வேறு வகையிலும் பலன்தர தொடங்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலருமான கூடுதல் ஆசிரியருமான பவன்குமார் கிரியப்பனவர் கூறுகையில்: கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பாக விவசாயத்தில் தன்னிகரற்று செயல்படுகின்றன. கிராமத்தில் உள்ள தரிசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு, பின்னர் இதில் வளர்ச்சி காணும் வகையிலும் இத்திட்டத்தின் வாயிலாக பலம் சேர்க்க வழி காணப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் பூவாணிகுப்பம் முன்னோடி கிராமமாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது விருத்தாசலம் ஒன்றியம் எருமனூரில் 12 ஏக்கரில் திட்டம் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் அரசு நிலங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்றார்.பூங்காக்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வுகிராம ஊராட்சிகளில் உருவாக்கப்படும் இதுபோன்ற திட்டங்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட பகுதி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வேளாண்மை சார்ந்த பயிற்சியும் வழங்குவதற்கு வழி காணப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி காலத்திலேயே மாணவர்களுக்கு தரிசு மற்றும் புறம்போக்கு நிலங்களின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பூங்காக்கள் திட்டத்தில் வேளாண்மையின் முக்கியத்துவம் பல்வேறு வகை நாற்றங்கால் உருவாக்குதல், மீன் குட்டை போன்றவற்றின் மூலம் மீன் வளர்ப்பு, கால்நடை பராமரிப்புக்கு தேவையான சாகுபடிகள் உள்ளிட்டவை குறித்து நேரடியாக விளக்கமளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எங்களுக்கு இரட்டிப்பு வருமானம்… கிராமத்தினர் மகிழ்ச்சி…கிராமங்களில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் வாயிலாக எங்களுக்கு இரட்டிப்பு வருமானம் தான் என கிராமத்தை சேர்ந்த விவசாயி கலியன் கூறும்போது, அரசுத்துறை, மானியத்தை வழங்கி இடத்தையும் மீட்டு ஒருங்கிணைந்த பூங்காக்கள் உருவாக்கத்தின் மூலம் கிராமத்தினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வாயிலாக பணியில் உள்ள கிராம மக்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட்டு பூங்காக்களில் பராமரிப்பு மற்றும் சாகுபடி, அறுவடை என பல்வேறு தரப்பட்ட வகையில் பணி கொடுக்கப்படுகிறது. இதுபோன்று தங்கள் கிராமத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு சாகுபடியாகும் தோட்ட மற்றும் இதர பயிர்களில் பலனை பயன்படுத்திக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் வருமானத்துக்கும், பயன்பாட்டிற்கும் கிராமத்தினருக்கு இரட்டிப்பு பலனாக இத்திட்டம் அமைந்துள்ளது என்றார்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்