கிராமத்தில் புகுந்து ஆட்டை அடித்து கொன்ற புலி: முதுமலை அருகே பீதி

கூடலூர்: முதுமலை அருகே கிராமத்தில் புகுந்த புலி, ஆட்டை அடித்து கொன்றதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுளியை அடுத்த கள்ளஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயியான இவர் கால்நடைகளும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று விவசாய தோட்டத்தின் அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த புலி ஒன்று ஆட்டினை கடித்துக் கொன்றது. இதனை அப்பகுதியில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நேரில் பார்த்து கூச்சலிட்டனர்.இதையடுத்து புலி வேட்டையாடிய ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு மெதுவாக வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. புலி மிகவும் சோர்வாக காணப்பட்டதாகவும், புலியின் வயிறு பகுதி ஒட்டிய நிலையில் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் தெப்பக்காடு லைட்பாடியை சேர்ந்த பொம்மன் என்பவரை புலி தாக்கியதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ஆட்டை வேட்டையாடியது அதே புலியாக இருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து புலி தாக்கி இருந்த ஆட்டை பார்வையிட்டனர். தற்போது வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.தற்காலிகமாக அப்பகுதியில் இரவில் யாரும் தனியாக நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கும் புலி ஒருவேளை வயதானதாகவோ அல்லது ஊனமுற்று வேட்டையாட முடியாத நிலையில் இருக்கலாம் என்பதால், இந்த புலியானது மீண்டும் குடியிருப்பு பகுதிகள் விவசாய நிலங்களுக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்து பிடித்துச் செல்ல வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்