கிண்டி, வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : மக்களுக்குத் தேவையான சேவைகளை தாமதமின்றி நிறைவேற்றித் தர உத்தரவு

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.    அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (25.5.2022) சென்னை, கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு பட்டா, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற  வருவாய்த் துறையின் சேவைகளைப் பெற வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். இ-சேவை மையத்திற்குச் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் எவ்வளவு நாட்களில் தீர்க்கப்படுகிறது போன்ற விவரங்கள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம்  கேட்டறிந்தார். பின்னர், வட்டாட்சியர் அலுவலக வருகைப் பதிவேடு மற்றும் இதர பதிவேடுகளை ஆய்வு செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வட்டாட்சியரிடம், வருகை தந்துள்ள அலுவலர்கள், பணியாளர்கள் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சேவைகள் பெற வந்திருந்த பொதுமக்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்கள் பெற வந்துள்ள சேவைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். வருவாய்த் துறை என்பது நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்குவது.  பொதுமக்களின் தேவைகளான பல்வேறு வகையான அடிப்படையான சான்றிதழ்களை வழங்குதல், முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற கைம்பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்கள், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் வழங்குதல், குடும்ப அட்டை வழங்குதல், விபத்து நிவாரணம் வழங்குதல் போன்ற முக்கியமான சேவைகள் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆய்வு செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களை எக்காரணம் கொண்டும் அலைக்கழிக்கக் கூடாது என்றும், அவர்களுக்கு உரிய சேவைகளை விரைவாக வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முதலமைச்சரின் தனிப் பிரிவிலிருந்து வந்துள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அரசின் முக்கியமான துறையாக விளங்கும் இதன் சேவை, மக்களுக்கு மிகவும் இன்றியமையாதது. எனவே, பொதுமக்கள் குறிப்பாக மாணவர்களின் கல்விக்குத் தேவையான சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பிற அரசு சேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் எந்தவிதத் தொய்வுமின்றி வழங்கிட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், இணை ஆணையர் (நில நிர்வாகம்) திரு.பார்த்திபன், வட்டாட்சியர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர். …

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்