‘கிணத்தை காணோம்’ சினிமா காட்சி உண்மையானது தோண்டாத கிணறுக்கு 4.12 லட்சம் நிதி: அதிமுக ஆட்சியில் நடந்த அவலம் அம்பலம்

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சியில் தோண்டாத கிணறுக்கு அதிமுக ஆட்சியில் 4.12 லட்சம் நிதி ஒதுக்கியது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சமர்ப்பிக்கப்படாத, 2017ம் ஆண்டு முதல் 2019ம்  ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (சிஏஜி) தலைவரின்  அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. இதில், கடந்த அதிமுக ஆட்சியில் மின்துறை, பொதுத்துறை என பல்வேறு துறைகளில் முறையற்ற நிர்வாகத்தின் காரணமாக சுமார் 35 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரத்தோடு குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையில் தோண்டாத ஆழ்துளை கிணறுக்கு 4.12 லட்சம் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் இடம் பெற்றிருக்கிறது.அதன்படி, பொது மற்றும் சமூகப்பிரிவு 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்த சிஏஜி அறிக்கையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நத்தம் பேரூராட்சியில், உண்மையில் இல்லாத ஆழ்துளை கிணறு மற்றும் ஆர்சிசி படிக்கட்டுக்காக 4.12 லட்சம் ஒப்பந்தக்காரருக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.நத்தம் பேரூராட்சியில் கோவில்பட்டி ராஜகுளம் காலனி மக்களுக்கு குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கான நீர் வழங்குவதை மேம்படுத்தும் நோக்கில், 6 அங்குலம் ஆழ்துளை கிணறு அமைத்தல் மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலைத்தோட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 20 லட்சம் மதிப்புள்ள பணிக்கு பேரூராட்சிகளின் இயக்குனர் நிர்வாக அனுமதி 2015ம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்டது. இந்த பணிக்கான நிதி உள்கட்டமைப்பு இடைநிரவல் நிதி 19 லட்சம் மற்றும் மீதமுள்ள நிதி பேரூராட்சியின் பொது நிதியில் இருந்து பெறப்பட்டது. அதன்படி, மோட்டார்களுடன் கூடிய இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்க 9.29 லட்சம், மேல்நிலைத்தொட்டி கட்ட 7.96 லட்சம், மோட்டார் மற்றும் பம்ப் வாங்க 2.75 லட்சம் என முடிவு செய்யப்பட்டது. 6 மாத காலத்தில் பணியை முடிக்க வேண்டும் என்று டெண்டர் வழங்கப்பட்டது.இந்தப் பணிகள் நடைபெற்றுள்ளதா என தணிக்கை குழு அதிகாரிகள் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ஆய்வு செய்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு எதுவும் அமைக்கப்படவில்லை. அதேநேரம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதாக புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல்நிலைத்தொட்டியும் பழுதடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயனற்று இருந்தது. இதுபற்றி விசாரித்தபோது, நத்தம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆழ்துளை கிணறு அமைக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டார். தணிக்கை துறை அதிகாரிகள் கண்டறிந்ததன் அடிப்படையில் ஒப்பந்தக்காரரிடம் இருந்து 2.36 லட்சம் திரும்ப பெற்றார். அதேபோன்று, மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் 1.75 லட்சம் செலவில் படிக்கட்டு அமைப்பதும் மதிப்பீட்டில் அடங்கும். ஆனால் ஆர்சிசி படிக்கட்டு அமைக்கவில்லை. இந்த பணியும் முடிக்கப்பட்டதாக புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான தொகை வழங்கப்பட்டுள்ளதாக கணக்கில் காட்டப்பட்டிருந்தது. அங்கு உள்ளபடியே ஒரு எம்எஸ் ஏணி மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் மோசடி பட்டியல் தயாரிக்கப்பட்டு அதற்கான தொகை வழங்கப்பட்டுள்ளது தணிக்கையில் கண்டறியப்பட்டது. இதையும் நத்தம் பேரூராட்சி செயல் அலுவலர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து படிக்கட்டு கட்டாததற்கான தொகை 1.23 லட்சத்தை ஒப்பந்தக்காரரின் வைப்பு தொகையில் இருந்து பிடித்தம் செய்வதாக ஒப்புக் கொண்டார். இதனிடையே, அந்த ஒப்பந்தக்காரர் காலமாகி விட்டார். இதன்மூலம் ஆழ்துளை கிணறு மற்றும் படிக்கட்டுகள் அமைக்காமலே 4.12 லட்சம் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதில் தொடர்புடைய அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தணிக்கை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.திரைப்படம் ஒன்றில், நடிகர் வடிவேலு தனது கிணத்தை காணோம் என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து அலப்பறை செய்யும் காமெடி காட்சி, தமிழக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால், அதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் நடந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுபோன்று, இன்னும் தோண்ட தோண்ட அதிமுக ஆட்சியில் நடந்த என்னென்ன ஊழல்கள் அரங்கேறுமோ என்பது போக போகத்தான் தெரியும்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை