கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி; ஜல்லி குவிச்சு ரொம்ப நாளாச்சு: மலைக்கிராம மக்கள் அவதி

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட்ட நிலையில், சாலைப்பணிகளை கிடப்பில் போட்டுள்ளதால், மலைக்கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் காந்திகிராமம், முத்துநகர், கோடாலியூத்து, முத்துராஜபுரம், அண்ணாநகர், தண்டியகுளம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் மானாவாரி விவசாயம் பிரதானமாக உள்ளது. பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பு, விவசாய கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் சாலை, குடிநீர், பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.சாலை மற்றும் பஸ் வசதியில்லாததால் இப்பகுதி மாணவ, மாணவியர் வாலிப்பாறை, தும்மக்குண்டு முருக்கோடை, வருசநாடு ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு தினசரி சுமார் 7 கி.மீ நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. பஸ் வசதி இல்லாததால், மழை காலங்களின்போது மாணவ, மாணவிகள் வீடு திரும்ப இரவு 9 மணியாகிறது. இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், இப்பகுதி மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவலம் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு, மலைக்கிராம மக்களின் கோரிக்கையையேற்று தார்ச்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால், அந்த வழியாக டூவீலர்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். இது குறித்து மலை கிராமவாசி ஈஸ்வரன் கூறுகையில், ‘தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இப்பகுதிமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். தார்ச்சாலை பணிகளை விரைந்து முடிப்பதுடன், பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்….

Related posts

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது மேலும் இரு வழக்கு

‘விரைவில் குப்பைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாகும்’

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக மதசார்பின்மை பற்றி பேசிய ஆளுநர் மீது நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்