‘காஸ் அடுப்பு ஆசையை காட்டி மோசம் பண்ணீட்டாங்க’ எங்களை மீண்டும் விறகு அடுப்பில் சமைக்க வைத்து கண்ணீரில் தவிக்க விடுகிறார் பிரதமர்

* சிலிண்டர் வாங்க பணமில்லை * சிட்டியிலும் பரிதவிக்கும் பெண்கள்சேலம் : காஸ் சிலிண்டர் விலை உயர்வால், மாநகர் பகுதிகளில் வசிக்கும் குடும்ப பெண்களும் விறகு அடுப்பிற்கு  மாறியுள்ளனர். எங்களை மீண்டும் விறகு அடுப்பில் சமைக்க வைத்து, கண்ணீரில் பிரதமர் மோடி தவிக்க விடுகிறார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களான எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ₹305.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை ₹610க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே நடப்பு மாதம் (அதே அக்டோபர்) சிலிண்டர் ₹915.50க்கு விற்பனையாகிறது. நடப்பாண்டின் கடந்த 7 மாதத்தை மட்டும் கணக்கிட்டால், மானியமில்லா வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ₹205.50 அதிகரிகப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை உயரும் போது, அதற்காக ஒன்றிய அரசு வழங்கும் மானியம் அதிகரித்தால், ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால், சிலிண்டருக்கான மானியம் பெருமளவு குறைக்கப்பட்டு, ₹40க்கு கீழ் வழங்கப்படுகிறது. அதுவும் மிக குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, இந்த மானியம் கிடைக்கிறது. 100க்கு 60 சதவீத பேருக்கு மானியம் நிறுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, காஸ் சிலிண்டருக்கான மானியம் போக மீதி தொகையை செலுத்தி, சிலிண்டரை வாடிக்கையாளர்கள் வாங்கி வந்தனர். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு வந்ததும், வங்கி கணக்கில் மானியம் செலுத்தப்படும் என அறிவித்து, சிலிண்டருக்கான முழு தொகையையும் வசூலிக்கும் முறையை அமல்படுத்தினர். முன்பெல்லாம் மானியம் போக மிக அதிகபட்சமாக ₹400 கொடுத்து சிலிண்டர் வாங்கும் நிலை இருந்தது. தற்போது மானியம் இல்லாமல் சிலிண்டருக்கு ₹950 கொடுக்க வேண்டியுள்ளது. சிலிண்டர் கொண்டு வரும் டெலிவரி மேன், 50 ரூபாய் கூடுதலாக பெற்றுக் கொள்கிறார். இதனால், ஒரு சிலிண்டருக்கு 1000 ரூபாய் என்ற நிலை வந்துவிட்டது. 30 நாள் சமையலுக்கு ₹1000 என்பது மிகவும் அதிகம் என வசதி படைத்த குடும்ப பெண்களே கூறுகின்றனர். ஏழை, நடுத்தர குடும்ப பெண்களால், சிலிண்டர் வாங்க காசு இல்லாமல் பரிதவிக்கின்றனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு, சிலிண்டர் விலை ₹850ஐ எட்டியபோதே கிராமபுற பகுதிகளில் பழையபடி விறகு அடிப்பிற்கு குடும்ப பெண்கள் மாறினர். தற்போது, விறகு அடுப்பு நகரங்களுக்கும் வந்து விட்டது. சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பொன்னம்மாபேட்டை ஏரியாவில் மட்டும், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் விறகு அடுப்பிற்கு பெண்கள் மாறியுள்ளனர்.அன்றாட கூலி வேலை பார்த்து தான், குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையில், சிலிண்டர் விலை 1000 ரூபாயாக மாறியிருப்பதால், அதனை வாங்க காசு இன்றி காட்டுப்பகுதிக்கு விறகு பொறுக்க பெண்களும், சிறுவர்களும் செல்கின்றனர். விறகு அடுப்பிற்கு மாறிய பெண்களின் வீடுகளில், காஸ் சிலிண்டர் காட்சி பொருளாக மாறியுள்ளது. வீட்டு வாசலில் விறகு அடுப்பை ஏற்படுத்தி, அதில் சாப்பாடு, தோசை, இட்லி என சமைத்து சாப்பிடுகின்றனர். சில பெண்கள், அப்பகுதியில் உள்ள மரக்கடைக்கு சென்று விறகு வாங்கி வந்து சமைக்கின்றனர். காஸ் சிலிண்டருக்கு கொடுக்க வேண்டிய காசில் பாதியளவு கொடுத்தால், ஒரு மாதத்திற்கு தேவையான விறகு கிடைத்து விடுகிறது என பெண்கள் தெரிவித்தனர். சிலிண்டருக்கு முழு தொகையை கொடுங்கள்.. நாங்கள் உங்க வங்கி கணக்கில் மானியத்தை செலுத்தி விடுவோம் என கூறி, நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் பிரதமர் மோடி. இப்ப மானியம் வராதது பற்றி காஸ் ஏஜென்சிகளிடம் சென்று கேட்டால், அது அரசின் கொள்கை முடிவு. அதனால், நாங்க ஒன்னும் செய்ய முடியாதுனு சொல்றாங்க. அப்படினா எங்களை மாதிரி ஏழை, நடுத்தர பெண்கள், கண்ணீர் வராமல் காஸ் சிலிண்டரில் சமைக்க கூடாதா?, பழையபடி விறகு அடுப்பு புகை மூட்டத்தில் மண்டி கண்ணீர் தான் வடிக்க வேண்டுமா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்புகின்றனர் பெண்கள். எங்க குரலெல்லாம் ஒருபோதும் பிரதமருக்கு கேட்காதா?, ஏன் இப்படி மாதந்தோறும் சிலிண்டர் விலையை ஏற்றுகிறீர்கள்?, மானியத்தை திடீரென நிறுத்திட்டீங்க? என காஸ் ஏஜென்சிகளில் தினமும் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சேலத்தை போலவே சென் னை, மதுரை, திருச்சி, கோவை என பெரும்பாலான நகரங்களிலும் பெண்கள் விறகு அடுப்பிற்கு மாறி வருகின்றனர். ஒன்றிய அரசு என்னதான் கொள்கை முடிவு எடுத்து மானியத்தை நிறுத்தினாலும், இப்படி ஏழை, நடுத்தர குடும்ப பெண்களை கண்ணீருடன் தவிக்க விடலாமா? என்பதே பெரும் குமுறலாக உள்ளது.மானியம் வழங்குவது அரசின் கொள்கை முடிவுகாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து, நேற்று முன்தினம் சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ராமகுமார் கூறுகையில், ‘‘உலக நாடுகள் வானிலை மாற்றம் குறித்து சில இலக்குகளை வைத்து செயல்படுகிறது. அதில் இந்தியாவும் மாசு இல்லாத நிலையை உருவாக்க முயற்சித்து வருகிறது. நம் நாட்டில் சிலிண்டர் பயன்பாடு 90 சதவீதமாக இருக்கிறது. இதில், 50 சதவீத அளவிற்கு தான் நாம் உற்பத்தி செய்கிறோம். மீதி 50 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டியிருகிறது. அதனால், உலக சந்தையின் விலைக்கு ஏற்ப சிலிண்டர் விலை மாறுகிறது. முன்பு அரசு மானியம் வழங்கியது. அதனால், விலை உயர்வு வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால், தற்போது அரசு கொள்கை முடிவு எடுத்து மானியத்தை நிறுத்தியுள்ளது,’’ என்று தெரிவித்துள்ளார்.60 சதவீத மக்கள் பாதிப்பு‘‘காஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாயை நெருங்கியிருப்பதால், நாட்டில் 60 சதவீத மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தற்போது 20 சதவீத பேர் விறகு அடுப்பிற்கு மாறி விட்டனர். சிலர் வேறு வழியே இன்றி, கடன் வாங்கி சிலிண்டர் வாங்கி வருகின்றனர். அவர்களும் விரைவில் பழையபடி விறகு அடுப்பிற்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூட்டை தூக்கும் கூலி வேலை, பட்டறையில் கூலி வேலை, விவசாய கூலி வேலை போன்றவற்றில் ஈடுபடும் நபர்களின் குடும்பம் பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளது. ஒரு சிலிண்டர் ஒருமாத பயன்பாட்டிற்கு வரும் நிலையில், அதற்காக ₹1000 கொடுக்க வேண்டியுள்ளது. இது மாத சம்பளமாக ₹6 ஆயிரம் முதல் ₹10 ஆயிரம் வரை வாங்கும் ஏழை, நடுத்தர மக்களை பெருமளவு பாதித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை ஏற்றி வருவதை ஒன்றிய பாஜ அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையை தருகிறது என்கின்றனர்,’’ தன்னார்வலர்கள்.இதுதான் ஒட்டுமொத்த ஏழை குடும்பங்களின் நிலைபொன்னம்மாபேட்டையை சேர்ந்த லதா கூறுகையில், ‘‘ஏழை, எளிய குடும்பங்களின் பசியை, ரேஷன் அரிசியே இன்றுவரை தீர்க்கிறது. இதை பணம் கொடுத்து காஸ் சிலிண்டர் வாங்கி சமைக்க முடியாததால்  விறகு அடுப்பில் சமைக்கிறோம். தற்போது மழைக்காலம் என்பதால் விறகு எரிவதற்கும், சோறு சமைப்பதற்கும் நெடுநேரமாகிறது. இதனால் காலையில் உரிய நேரத்தில் சமைத்துக் கொடுத்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும், கணவரை வேலைக்கு அனுப்பவும் முடியவில்லை. இதனால் படிப்பு பாதித்து, வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இது எங்களது ஒரு குடும்பத்தின் நிலை அல்ல. ஒட்டுமொத்த ஏழைத் தொழிலாளர் குடும்பங்களின் நிலையும் இது தான். எனவே, இது மக்களை வெகுவாக பாதிக்கும் முக்கிய பிரச்னை என்பதை உணர்ந்து, அரசு காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்,’’ என்றார்….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு