Thursday, July 4, 2024
Home » காவேரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

காவேரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை அரசு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by kannappan

சென்னை: தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது தளத்திலுள்ள கூட்ட அரங்கில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டத்திற்கு தலைமையேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். அவர் பேசியதாவது; மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தலைமைச் செயலாளர் அவர்களே, பல்வேறு துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய அரசு அதிகாரிகளே, அலுவலர்களே,  இந்த அமைப்பின் உழவர் பிரதிநிதிகளாக வருகை தந்திருக்கக்கூடிய  உறுப்பினர்களே, வேளாண் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் விஞ்ஞானிகளே, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான காலை வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழக அரசால் அமைக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டத்துக்கு வருகை தந்திருக்கக்கூடிய அனைவரையும் அரசின் சார்பிலும், என்னுடைய சார்பிலும் வரவேற்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். தஞ்சாவூர் உள்ளிட்ட காவேரி டெல்டா என்பது இப்போது மட்டுமல்ல; நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஒரு பகுதியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.  காவேரி டெல்டா என்பது மிகவும் செழிப்பான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் முழுப்பகுதியையும், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளையும் உள்ளடக்கியது. காவேரி நதியின் மூலம் பாசனம் கிடைக்கப் பெறுவதால், இப்பகுதிகளில் நெல் ஒரு முக்கியமான பயிராக கிட்டத்தட்ட 14 இலட்சம் ஏக்கர் பரப்பிலே சாகுபடி செய்யப்பட்டு, மாநிலத்தின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் 34 விழுக்காடு அரிசி உற்பத்தியினை இந்தக் காவேரி டெல்டா பகுதி அளித்து வருகிறது. தென்னை, கரும்பு, வாழை, மக்காச்சோளம், பயறு வகைகள், எள், பருத்தி போன்ற பயிர்களும், டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், இந்தப் பகுதியே மிகப்பெரிய வேளாண் மண்டலமாகக் காணப்படுகிறது. இந்தப் பகுதியைச் சார்ந்த உழவர் பெருமக்கள் மட்டுமல்லாமல், வேளாண் தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண் தொழிலைத்தான் பெரிதும் சார்ந்திருக்கிறார்கள்.வேளாண்மை, உணவு உற்பத்தி பகுதியாக இது இருந்தாலும், இன்னொரு பக்கத்திலே பல்வேறு நெருக்கடிகளுக்குரிய பகுதியாகவும் இது இருக்கிறது. இப்பகுதிகளில், வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் பெரும் இடர்பாடுகளை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன. கர்நாடகா மாநிலத்திலிருந்து நமக்கு வரவேண்டிய காவேரி நதிநீரைப் பெறுவதற்கு அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் நீண்டகாலமாக நாம் தொடர்ந்து போராடி வந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வாழும் உழவர்கள், வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக இந்த அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காவேரி டெல்டா பகுதியில் விளைநிலங்களைப் பாதுகாக்கவும், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களை மேம்படுத்தவும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தினை மட்டும் இயற்றிவிட்டு, அதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர எந்தவொரு முன்னெடுப்பையும் முந்தைய அரசு எடுக்கவில்லை. முந்தைய ஆட்சி கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும், அது வேளாண் பெருமக்களுடைய நலனைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளை அளிக்கக்கூடிய சட்டமாக இருக்கிற காரணத்தால், அந்தச் சட்டத்தின் கூறுகளையெல்லாம் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் நம்முடைய அரசு உறுதியாக இருக்கிறது என்பதை உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வேளாண்மைக்கு நம்முடைய அரசு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறது  என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது.  · உழவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கச் செய்த அரசுதான் நம்முடைய கழக அரசு.· சென்ற ஆண்டில் மேட்டூர் அணையினை குறித்த காலத்திலே, அதாவது ஜூன் 12 ஆம் தேதியே திறந்து, 61 கோடி ரூபாய் மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை நம்முடைய அரசு செயல்படுத்திக் காட்டியிருக்கிறது.· மேட்டூர் அணையினைத் திறப்பதற்கு முன்பாகவே, பாசனக் கால்வாய்கள் அனைத்தையும் 65 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளை முடுக்கி விட்டது நம்முடைய அரசு.  · அதன் விளைவாக, கடந்த 2021 ஆண்டின் குறுவை நெல் சாகுபடிப் பரப்பு 4 இலட்சத்து 90 ஆயிரம் ஏக்கரைக் கடந்து, கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனையினை நாம் ஏற்படுத்தினோம். இது நம்முடைய ஓராண்டு சாதனையில், மிக முக்கியமான, பெருமைக்குரிய சாதனையாக அமைந்திருக்கிறது.· தொடர்ந்து நடப்பாண்டிலும், தூர்வாரக்கூடிய பணிகள் 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.· இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், நெல் ஜெயராமன் அவர்களின் பெயரில் மரபுசார் நெல் இரகங்களை மீட்டெடுக்கும் திட்டம் ஆகியவற்றையும் நாம் அறிவித்திருக்கிறோம்.· காவிரி டெல்டாவில் 30 கோடியே 50 இலட்சம் ரூபாயில் திருவாரூரில் சேமிப்புக் கிடங்குகள், உலர் களங்கள் · காட்டுமன்னார் கோவில், பேராவூரணி பகுதிகளில் புதிய உழவர் சந்தைகள் · திருவாரூர் பகுதியில் உணவுப் பூங்கா, 14 கோடியே 50 இலட்சம் ரூபாய் மானியத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் · நாகப்பட்டினம் கீழ்வேளூரில் புதிய வேளாண்மைக் கல்லூரி· கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம்· வேளாண் விளைபொருட்கள் அதிக வரத்துள்ள திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் போன்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு அருகில் சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய விற்பனை நிலையங்கள் · தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி போன்ற மாவட்டங்களை உள்ளடக்கி, அரிசி ஆலைகள், பயறு உடைக்கும் நிலையங்கள், எண்ணெய் பிழியும் ஆலைகள், கயிறு ஆலைகள் போன்ற பல்வேறு வேளாண் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில், திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையே இருக்கக்கூடிய பகுதியை வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவிக்கை (Declaration of Agro-Industrial Corridor) செய்யப்பட்டது; என பல்வேறு திட்டங்களை ஆகியன வேளாண் பெருமக்கள் நலன் காக்க கடந்த ஓராண்டில் அறிவித்து, அவற்றையெல்லாம் நாம் செயல்படுத்தி வருகிறோம். காவேரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் இந்த அரசு அனுமதிக்காது என்பதையும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வேளாண்மைத் தொழிலை நம்பியிருக்கக்கூடிய உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலின் நலனைப் பாதுகாக்கவும், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த அரசு முனைப்போடு செயல்படும்.பாசன நீரைப் பொறுத்தமட்டில், கர்நாடகாவிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவதற்கு இந்த அரசு சட்டரீதியான, அரசியல் ரீதியான எல்லா ஏற்பா டுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளும்.· பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மூலம் காவேரி டெல்டா பகுதிகளில் நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும். அதற்காக அரசு மேற்கொள்ளக்கூடிய முன்னெடுப்புகளுக்கு நீங்களெல்லாம் ஒத்துழைப்பு வழங்கி, துணை நிற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.· உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கக்கூடிய வகையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய பயிர் வகைகளையும், புதிய மாற்றுத் தொழில்நுட்பங்களையும் உடனுக்குடன் ஏற்று நடைமுறைப்படுத்தி நல்ல விளைச்சலை அடைய வேண்டும்.· வேளாண் தொழிலில் வருமானம் பெருக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் குறுவை மற்றும் கோடைப் பருவத்தில் குறைந்த நீர்த் தேவையுள்ள மாற்றுப் பயிர் சாகுபடியினை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, மதிப்புக் கூட்டுதல் போன்ற ஆலோசனைகளை உள்வாங்கி செயல்படுத்திட வேண்டும்.  · இத்தகைய பயிர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, உழவர்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் துணை நிற்க வேண்டும்.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தில் உள்ள எல்லாப்  பிரிவுகளும், செயல்பாட்டிற்கு வரும் வகையில், விவசாயிகளும், விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் நல்ல முறையிலே கருத்துப் பரிமாற்றங்கள் செய்து, காவேரி டெல்டா பகுதிக்கென நீண்ட காலத் திட்டம் ஒன்றை வகுக்க உங்களது உயரிய பங்களிப்பையும், கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இந்தக் கூட்டத்திலே வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். வளமான தமிழகம் அமைக்க வேளாண்மையைக் காக்க வேண்டும். தமிழ்நாட்டில், டெல்டா மாவட்டங்கள் வேளாண்மையின் மிக முக்கியமான அங்கம் என்கிற காரணத்தால், அதனைக் கண்ணும் கருத்துமாக காக்க வேண்டும் என்று நான் கேட்டு, என்னுடைய தலைமை உரையை நிறைவு செய்கிறேன்.  இந்தக் கூட்டத்தில் உங்களுடைய மேலான கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்….

You may also like

Leave a Comment

1 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi