காவல் நிலையம், தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை வேலூரில் பரபரப்பு

வேலூர், ஜூலை 12: வேலூரில் காவல் நிலையம், தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். வேலூர் மாவட்டம் பாகாயத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(28) மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி வேலூர் பாகாயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்தோஷ்குமாரை, மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை பெறும்படி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் மறுத்துவிட்டராம்.

இந்நிலையில், சந்தோஷ்குமார், ேநற்று உறவினர் தமிழ்செல்வனுடன் சிகிச்சைக்காக வேலூருக்கு வந்தார். அப்போது, தமிழ்செல்வன் வைத்திருந்த செல்போனை, சந்தோஷ்குமார் கேட்டாராம். அதற்கு அவர் தரமறுத்துவிட்டாராம். பின்னர் இயற்கை உபாதை கழிக்க பஸ்சை நிறுத்துமாறு சந்தோஷ்குமார் தெரிவித்தாராம். ஆனால் பஸ் நிறுத்தாமல் வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், தமிழ்செல்வனிடம் வைத்திருந்த போனை எடுத்து, போலீசின் அவசர அழைப்பு எண் 100க்கு போன் செய்து, பாகாயம் போலீஸ் நிலையம், தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து போனை துண்டித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அது புரளி என்பது தெரியவந்தது. மேலும், 100க்கு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது, சந்தோஷ்குமார் என தெரியவந்தது. இதைதொடர்ந்து, பாகாயம் போலீசார் சந்தோஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ்குமார், அதிகமாக சினிமா படங்களை பார்த்து, அதில் வருவதுபோல், கதாபாத்திரம் செய்வது உண்டு. ஏற்கனவே 2 முறை பாகாயம் காவல் நிலையத்திற்கு வந்து, போலீசாரிடம் பல கதை சொல்லியுள்ளார். அவரின் மனநிலை தெரிந்து கொண்டு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது உறவினர் செல்போன் வழங்காததால், 100க்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை