கால்நடைகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்துச் செல்ல தடை: வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க கூடாது என வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என, திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், வனப்பகுதிகளுக்குள் கால்நடைகள் கொண்டு செல்வதால், விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாகவும், மனித – விலங்கு மோதல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு கால்நடைகளை அழைத்துச் செல்வதால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது எனத் தெரிவித்தது. அதனால், தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையில், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், சிபிஐ எஸ்.பி நிர்மலா தேவி, டி.எஸ்.பி சந்தோஷ்குமார் டி.எஸ்.பி ஆகாஷ்குமார்  உள்பட 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக அரசு, தமிழக வன பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் மற்றும் வைகை அணை நக்ஸல் தடுப்பு படை கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவில் நியமிக்க பரிந்துரைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கேரள அரசு இன்னும் அதிகாரியை பரிந்துரைக்காததால், சிறப்பு புலனாய்வு குழு நியமனம் தொடர்பாக இறுதி முடிவெடுக்க ஏதுவாக வழக்கு விசாரணையை மார்ச் 17 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை