காலாவதி பாஸ் முலம் கேரளாவுக்கு ஜல்லிக்கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்; ஒருவர் கைது-தப்பி ஓடிய 3 பேருக்கு வலை

கம்பம் : காலாவதி பாஸ் மூலம் கேரளாவுக்கு ஜல்லிகற்கள் கடத்திச் சென்ற 2 லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கம்பம் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், லாரி உரிமையாளர்கள் உட்பட தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஜல்லிகற்களை லாரியில் கடத்துவதாக, தேனி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சண்முகவள்ளிக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அவர் நேற்று முன்தினம் இரவு கம்பம்மெட்டு சாலையில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அவ்வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த, ஒரு லாரியை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது அந்த லாரியில் காலாவதியான பாஸ் முலம், கேரளாவுக்கு ஜல்லி கடத்திச்செல்வது தெரிய வந்தது. இதனால், லாரியை பறிமுதல் செய்து, கொண்டு வந்தபோது, லாரியில் இருந்த டிரைவர் இறங்கி தப்பியோடினார். இதேபோல, அடுத்து வந்த மற்றொரு லாரியையும் நிறுத்தி சோதனை செய்தார். அதிலும், காலாவதி பாஸ் முலம் கேரளாவுக்கு ஜல்லிக்கற்களை அள்ளிச்செல்வது தெரிய வந்தது. அந்த லாரியில் வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், ‘அவர் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (40) என்பதும், காலாவதியான அனுமதி சீட்டு வைத்து ஜல்லிக்கற்களை லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு லாரிகளையும் உதவி இயக்குனர் பறிமுதல் செய்து கம்பம் வடக்கு போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிலைமணி வழக்குப்பதிந்து டிரைவர் ஈஸ்வரனை கைது செய்தார். தலைமறைவான டிரைவர் மற்றும் இரண்டு லாரிகளின் உரிமையாளர்களையும் தேடி வருகின்றனர். இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சண்முகவள்ளி கூறுகையில், காலாவதியான பாஸ் மூலம் இரவு நேரங்களில் ஜல்லி கடத்தி உள்ளனர். இந்த ஆவணங்களை சோதனைச்சாவடியிலும் பார்த்து பதிவு செய்கின்றனர். கனிமவள திருட்டை தடுக்க நாங்கள் மட்டுமல்ல, அனைத்து துறையினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்….

Related posts

நெற்பயிரை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மனு

கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை காயரம்பேடு பகுதிக்கு இடமாற்றம் செய்ய கடும் எதிர்ப்பு: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

திருப்போரூர் பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி, நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை