காற்றழுத்த தாழ்வுப்பகுதி சென்னை நோக்கி நகர்கிறது தமிழகத்துக்கு மீண்டும் ‘ரெட் அலர்ட்’: இன்றும், நாளையும் கன மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்ததாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிக்கு நகர்ந்து வருவதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும். இதையடுத்து, தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் நீடித்து வருவதால் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது. நேற்றைய நிலவரம் குறித்து ஏற்கெனவே கணிக்கப்பட்டு இருந்தபடி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரயலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி, கோவை, கிருஷ்ணகிரி, ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்தது. அதில் கன்னியாகுமரியில் 18 மிமீ, கள்ளக்குறிச்சி 16 மிமீ, நாகப்பட்டினம் 22 மிமீ, பெரம்பலூர் 21 மிமீ, சேலம் 12 மிமீ, சிவகங்கை 25 மிமீ, தஞ்சாவூர் 22 மிமீ, திருவாரூர் 13 மிமீ, திருச்சி 19மிமீ மழை பெய்துள்ளது. சராசரியாக தமிழகத்தில் நேற்று மட்டும் 8 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றும் நாளையும் மேற்கு திசையில் நகர்ந்து, நாளை தெற்கு ஆந்திரா மற்றும் வட  தமிழக கடலோரப் பகுதிக்கு வரும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை  மற்றும் மிக கனமழை பெய்யும். இது  தவிர ராணிப் பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். 18ம் தேதி சென்னை, ராணிப் பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை  பெய்யும். குறிப்பாக 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்திற்கு மிக கனமழை பெய்யும்  என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று அல்லது நாளை இணையும் நிகழ்வின் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். எனவே, வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்