கார் மோதி மின்கம்பம் சேதம்

சென்னிமலை, ஆக.9: சென்னிமலை-காங்கயம் ரோட்டில் உள்ள கணுவாய் வழியாக நேற்று மதியம் சென்னிமலையை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது காரை ஓட்டி வந்தவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால் கார் நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள இரும்பு மின் கம்பத்தில் மோதியது. இதனால் மின் கம்பம் உடைந்து நடு ரோட்டில் விழுந்தது. மேலும் மின் கம்பிகளும் அறுந்து விழுந்தது.‌ இதனால் அப்போது மின்சாரம் தானாகவே துண்டிக்கப்பட்டது.
மின் கம்பத்தில் மோதிய கார் வனப்பகுதிக்குள் சென்று நின்று விட்டது.

காரை ஓட்டி வந்தவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று ரோட்டில் கிடந்த மின் கம்பிகளை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் பசுவபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து சென்னிமலைக்கு வரும் உயர் அழுத்த மின் கம்பிகளும் அறுந்து விழுந்ததால் சென்னிமலை நகரத்தில் சுமார் 2 மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் மாற்று ஏற்பாடு மூலம் சென்னிமலை நகரத்துக்கு மின் விநியோகம் செய்தனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது