கார் பரிசாக விழுந்துள்ளதாக கூறி ஆன்லைனில் ₹5 லட்சத்தை இழந்ததால் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

 

செங்கல்பட்டு, ஏப். 27: செங்கல்பட்டு அருகே கார் பரிசாக விழுந்ததாக, ஆன்லைன் மோசடியில் பணத்தை பறிகொடுத்த வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (34). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இதில், சரவணன் செங்கல்பட்டு அடுத்த மேலேரிப்பாக்கம் பகுதியில் உள்ள அட்டைக் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சரவணனின் மனைவி விஜயலட்சுமிக்கு ெசல்போன் மூலம் மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில், விஜயலட்மியிடம் உங்களுக்கு ₹22 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக விழுந்துள்ளது. முழுத்தொகையும் கட்டத் தேவையில்லை. எனவே, ஆன்லைன் மூலம் ₹36 ஆயிரம் கட்டுங்கள் உங்களுக்கு கார் கிடைத்துவிடும் என பதிலளித்துள்ளனர்.

இதுகுறித்து விஜயலட்சுமி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அந்த ெசல்போன் நம்பரையும் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து, ரிஜிஸ்டர் தொகை, வாகன காப்பீட்டு தொகை, சாலைவரிக்கான தொகை ஆவணங்களுக்கான தொகை என, ஒவ்வொரு தவணையாக மொத்தம் ₹4 லட்சத்து 99 ஆயிரத்து 200 என அந்த மர்ம நபர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆன்லைன் மூலமாக அந்த தொகையை இந்த தம்பதியினர் அனுப்பியுள்ளனர். பல நாட்களாக கார் கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் ஆன்லைன் செல்பேசி எண்ணிற்கு தொடர்ப்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சரவணன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி இருவரும் தாங்கள் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரிய வந்தது.

இது குறித்து செங்கல்பட்டு சைபர் க்ரைம் போலீசாரிடம் நடந்த சம்பவத்தை புகாராக அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த தொலைபேசி மற்றும் அவர்கள் அனுப்பிய ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரிய வந்தது. பணத்தை பறிகொடுத்துவிட்டோமே, ஏமாந்து விட்டோமே என்ற மன உளைச்சலில் இருந்த சரவணன் நேற்று காலை பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை