கார் கவிழ்ந்து பெங்களூருவை சேர்ந்த 5 பேர் படுகாயம் போலீசார் மீட்டனர் பொன்னை அருகே

பொன்னை, மார்ச் 1: பொன்னை அருகே முட்புதரில் பாய்ந்து கார் கவிழ்ந்த விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 5 பேர் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய காரில் சென்றனர். பின்னர், சுவாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தொடர்ந்து, வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த தீயார்குப்பம் பகுதி வழியாக வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் முட்புதரில் பாய்ந்தது. பின்னர், கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் முற்றிலும் சேதமடைந்தது. மேலும், காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொன்னை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் ஒருவரது நிலை மோசமாக உள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொன்னை போலீசார் வழக்கு பதிந்து விபத்தில் சிக்கியவர்கள் குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை