காரைக்காலில் பள்ளி மாணவன் கொலை பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்-அடுத்த கட்ட நடவடிக்கையில் போலீசார் தீவிரம்

காரைக்கால் : காரைக்கால் தனியார் ஆங்கில பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்த பால மணிகண்டன், சக வகுப்பு மாணவியின் படிப்பில் போட்டியின் காரணமாக சிறுமியின் தாய் சகாயராணி விக்டோரியா மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார். இதில் கடந்த 3ம் தேதி சிறுவன் பால மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த நிலையில் உயிரிழந்த பால மணிகண்டனுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் 2 நாட்களாக சிகிச்சை அளித்த முழு தகவல்கள் தற்போது போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும் சகாயராணி விக்டோரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனுக்கு கொடுத்த எலி மருந்து வாங்கிய கடையில் உள்ள மீதமுள்ள விஷத் தன்மையுள்ள பூச்சி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பூச்சி மருந்து கலக்கப்பட்ட 2 குளிர்பான பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். சிறுவன் பால மணிகண்டனின் கொலைக்கு வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கியது மட்டும்தானா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனை தொடர்ந்து சிறுவன் பால மணிகண்டன் மற்றும் சிறுமி படித்த தனியார் பள்ளியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இருவரும் 8 ம் வகுப்பு மற்றும் அதற்கு முன் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல், ரேங்க் கார்டு மற்றும் மாணவர்களின் ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.மேலும், பள்ளியின் உட்புறப்பகுதி, வெளிப்புறப் பகுதி, கொலையாளி சகாயராணி விக்டோரியா நடமாடிய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை குற்றப்பிரிவு போலீசார் உன்னிப்பாக ஆய்வு செய்தும் வருகின்றனர்.இதுவரை போலீசாரின் விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள், முக்கிய தகவல்கள் இந்த வழக்குக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.போலீசாரின் புதிய கோணத்திலான விசாரணை வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தயுள்ளது. இதனால் விசாரணையை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த வழக்கின் வலுவான இறுதி வடிவம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் பாலமணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை மற்றும் உடலின் பாகங்கள் கூராய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. உடலின் பாகங்களை ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தினால் சிறுவன் அருந்திய குளிர்பானத்தில் எவ்வளவு விஷம் இருந்தது? விஷம் கலந்த குளிர்பானத்தை அருந்தியதால் மட்டும் சிறுவனுக்கு மரணம் நிகழ்ந்ததா? என்பது புலனாகும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.உடலின் உட்புறம் இந்த ரசாயனம் ஏற்படுத்திய பயங்கர விளைவால் உட்புறமாக இரத்தக்கசிவும் அதிகரித்து திடீர் மரணம் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. சிறுவன் பால மணிகண்டனின் உடலை காரைக்கால் அரசு பொது மருத்துவமனை தடயவியல் மருத்துவர் நரசிம்மமூர்த்தி தலைமையிலான ஜிப்மர் மருத்துவர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வு ஒவ்வொன்றையும் வீடியோ பதிவுக்கும் போலீசார் உட்படுத்தினர்.முதல்கட்ட ஆய்வில் விஷமானது அதிவேகமாக உடலில் பரவி, உள்ளுறுப்புகளை தாக்கி, செயலிழக்க செய்ததாகவும் அதனாலேயே மரணம் தவிர்க்க முடியாததாகி இருக்கிறது என்ற விவரங்களை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ரசாயன பரிசோதனையின் முடிவுகள் போலீசாருக்கு வந்தபின் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலர் விசாரிக்கப்படுவார்களா? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்….

Related posts

மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 55 வருடம் சிறை

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?