காரணைப்புதுச்சேரியில் ₹13 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

 

கூடுவாஞ்சேரி, செப்.7: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சியில், காரணைப்புதுச்சேரி, காட்டூர் அண்ணா நகர், கோகுலம் காலனி, மைலிமா நகர், பெரியார் நகர், பாபா நகர், விநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்குட்பட்ட பாபா நகரில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாகவும் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக காட்சி அளித்து வருகின்றது. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக மாவட்ட கவுன்சிலர் கஜா என்ற கஜேந்திரனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ₹13 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் நளினி ஜெகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கஜா என்ற கஜேந்திரன் கலந்துகொண்டு பாபா நகர் பிரதான சாலைக்கு ₹13 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்காக பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் வார்டு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி