காயமடைந்தவரின் ₹80 ஆயிரம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

ராசிபுரம், செப்.23: ராசிபுரம் அருகே விபத்தில் சிக்கி சுயநினைவிழந்து மயங்கி விழுந்தவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரிடம் இருந்த ₹80 ஆயிரத்தை, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதவன்(36), கூலி தொழிலாளி. இவர் நேற்று பெரியமணலியில் இருந்து, திருச்செங்கோடு நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, கொன்னையார் பஸ் நிலையம் அருகே, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டூவீலர் மீது மோதிய விபத்தில், ஆதவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மருத்துவ உதவியாளர் மணிவேல், டிரைவர் கங்காதரன் ஆகியோர், ஆதவனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது, சுயநினைவின்றி இருந்த ஆதவனை பரிசோதித்த போது, அவரிடம் ₹80 ஆயிரத்து 55பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆதவனின் உறவினர்களிடம், பணத்தை பத்திரமாக ஒப்படைத்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையை, ஆதவனின் உறவினர்கள் பாராட்டினர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை