Friday, July 5, 2024
Home » காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: மாரீசன்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: மாரீசன்

by kannappan

தவறிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள்; தவறு செய்வதற்கென்றே இருப்பவர்கள் என உலகில் யாருமே கிடையாது. நேரம், சந்தர்ப்பம் தவறு செய்ய வைக்கின்றது; வேறுவழியின்றித் தவறு செய்து சங்கடப்படும்போது, அனுபவம் உணர்த்துகிறது; மனம் தானே நல்வழியைக் காட்டுகின்றது. திருந்துகிறார்கள் அல்லது திருந்தி நல்வழிப்பட முயல்கிறார்கள். அப்போதும் பழைய செயல்களின் வாசனை வந்து தாக்க, விளைவு என்ன என்பதை விளக்குவதே, ‘மாரீசன்’ கதா பாத்திரம்.ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நமக்குப் பலவகைகளிலும் வழி காட்டுகின்றன. அந்த வகையில், மாரீசன் என்பவன் நம்மை அப்படியே பிரதிபலிக்கின்றான். வாருங்கள்! மாரீசனைக் காண்போம்!தாடகையின் கணவர் சுந்தன்! கந்த-உபசுந்தர்களில் வரும் சுந்தன் வேறு; இவன் வேறு. தாடகை-சுந்தன் தம்பதியரின் பிள்ளை மாரீசன். அகத்தியருக்குத் தீங்கு செய்து, அவர் சாபத்தால் அரக்கனாக ஆனவன்; தாயான தாடகையுடன் சேர்ந்து கொண்டு, முனிவர்களுக்கும் அவர்கள் செய்த யாகங்களுக்கும் பெருத்தஅளவில் இடையூறு செய்துவந்தவன் மாரீசன். மாரீசனைப் பற்றி, விசுவாமித்திர முனிவரின் யாகத்தின் போது, விரிவாகத் தொடங்குகிறது. விசுவாமித்திர முனிவர் யாகத்தைத் தொடங்குகிறார்; ராமரும் லட்சுமணனும் யாகத்தைக் காப்பதற்கான செயல்களில் பொறுப்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வேளையில் மாரீசன், சுபாகு முதலான பல அரக்கர்களுடன் வந்து யாகத்தைக் கெடுக்க முயலுகிறான். ராமர் அம்புகளை ஏவினார். விளைவு என்ன என்பதைக் கம்பர் சொல்கிறார்.          திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்வெருவரு தாடகை பயந்த வீரர்கள்இருவரில் ஒருவனைக் கடலில் இட்டதங்குஒருவனை அந்தகன் புரத்தி னுய்த்ததே                              (கம்ப ராமாயணம்)ராமர் ஏவிய அம்புகளில் ஒன்று, மாரீசனைக் கடலில் கொண்டுபோய்த் தள்ளியது; ஓர் அம்பு, சுபாகுவைக்கொன்றது.மாரீசனைக்கொல்லவில்லை ராமரின் அம்பு. காரணம்? அந்த மாரீசனை வைத்துத்தான் ராமவதாரத்தின் முக்கியமான நிகழ்வு நடந்தாக வேண்டும். அதற்காகத்தான் மாரீசனைக் கொல்லாமல் விட்டு வைத்தார் ராமர்.ஆம்! ராவணன் சீதையைக்கவர்ந்து கொண்டுபோக, பெரும் துணையாய் – ஒரே துணையாய் இருந்தவன் மாரீசன். ஆகவே அந்த நிகழ்வைக்காணலாம்.சூர்ப்பணகை போய் ராவணனிடம் சீதையைப்பற்றி வர்ணித்து, “தூக்கிக்கொண்டு வா அவளை!” என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள். அதைக் கேட்ட அளவிலேயே ராவணன் சீதையைக் கொண்டுவரத் திட்டமிட்டான்;தன் எண்ணத்தை மாரீசன் மூலம் நிறைவேற்றிக்கொள்ளத் திட்டமிட்ட ராவணன் நேரே மாரீசனிடம் சென்றான்.அங்கே மாரீசன் ‘இந்திரியமடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான்’ (கம்பர்)பொறி புலன்களை அடக்கித் தவம்செய்து கொண்டிருந்தான் மாரீசன்; தன்னந்தனியனாய்த் தன் இருப்பிடம் தேடி வந்த ராவணனைக்கண்டதும், “இவன் எதற்காக வந்தானோ?” என்று பயந்தான்; இருந்தாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல், ராவணனை வரவேற்று உபசரித்து,“வந்த காரணம் என்ன?” எனக் கேட்டான் மாரீசன்.ராவணன் சொல்லத் தொடங்கினான்; தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லாமல், மாரீசனின் உணர்ச்சியைத் தூண்டி தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறான் ராவணன்.“மாரீசா!மானமில்லையா உனக்கு? வலிமையில்லாத மனிதர்கள் வலிமை பெற்றவர்களாக ஆகி, உன் மருமகள் சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து விட்டார்கள்; அதை அறிந்து எதிர்த்த கரன் முதலான உன் உறவினர்களை எல்லாம் கொன்று விட்டார்கள். இது உன் குலத்திற்கும் என் குலத்திற்கும் பழியை அல்லவா உண்டாக்கி விட்டது! “அதற்கெல்லாம் சேர்த்துப் பழிக்குப்பழி வாங்க வேண்டிய நீ, கைகளைத் தலைக்குமேல் சுமந்துகொண்டு தவம் செய்கிறாயே! மானத்தாலும் கோபத்தாலும் மனம் கொதிக்கிறது எனக்கு; இருந்தாலும் அந்த மனிதர்களோடு, நான் போர் செய்வது தகாது என்று, உன் உதவியை நாடி வந்தேன். அவர்களோடு இருக்கும் பெண்ணை(சீதையை)த் தூக்கிவரவேண்டும். உன் மருமகளான சூர்ப்பணகையின் மானபங்கத்திற்கு எதிர் மானபங்கம் செய்து, அவர்களைப் பழிக்குப்பழி வாங்க வேண்டாமா?” என்று விரிவாகப்பேசி, மாரீசனின் உணர்ச்சியைத் தூண்டிவிட முயன்றான் ராவணன்.ராவணனின் வார்த்தைகளைக் கேட்டதும் மாரீசனுக்கு உடம்பெல்லாம் எரிவதைப்போல இருந்தது; கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு, “சிச்சீ!என்ன சொன்னாய்?” என்று பயத்தை விட்டு, சிந்தையைத் தெளிவு படுத்தி–்க் கொண்டு பேசத் தொடங்கினான்;“மன்னர் மன்னா! அறிவை இழந்து வாழ்வைக்கெடுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டாய். ப்ச்!… இது உன் செயலல்ல; என்ன செய்ய…விதி! உன்னை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது. உன் கோபத்தால் எனக்கு மரணமே வந்தாலும் சரி! நான் பயப்பட வில்லை. உனக்கு நல்லதைத்தான் சொல்கிறேன்.கேள்!“பெருந்தவம் செய்து, யாரும் பெறமுடியாத உயர்ந்த வாழ்வைப் பெற்றிருக்கிறாய்! தர்மவழிப்படி சம்பாதித்ததை, அதர்ம வழியில் செலவழித்து அழிந்து போகாதே! நட்பு பாராட்டும் அரசர்களின் நாட்டைக் கவர்ந்து கொள்வது, குடிமக்களைக் கசக்கிப்பிழிந்து வரி வசூலிப்பது, அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படுவது ஆகியவற்றைச் செய்பவர்களைத் தண்டிக்க ஆளில்லா விட்டாலும், தர்மதேவதை தண்டிப்பது நிச்சயம்! இதுவரை, தீயவர்கள் யார் வாழ்ந்தார்கள்? சொல்! “உன் பேச்சைக்கேட்டு நடக்கும், அழகிய மனைவியர்  பலர் இருக்க, அயலான் மனைவி மீது ஏன் மோகம் கொள்கிறாய்? சீதையை நீ தூக்கிக்கொண்டு வந்தாலும், அவளை உன்னால் அடைய முடியாது; பழியைத்தான் அடைவாய்! என் தாய் தாடகை முதல், கரன் முதலான பலரையும் கொன்ற ராமனின் அம்பால், உன் குலத்தோடு நீ மாண்டு போவாய்!“சொல்வதைக் கேள்! தீய எண்ணத்தை விடு! சீரும் செல்வமுமாக இதுவரை வாழ்ந்ததைப்போல, இனிமேலும் சந்தோஷமாக வாழும் வழியைப்பார்!” என்று நீளநெடுக, ராவணனுக்கு அறவுரை-அறிவுரை சொன்னான் மாரீசன்.மாரீசன் ராவணனிடம் பேசிய வார்த்தைகளைப் பார்த்தீர்களல்லவா?முனிவர்களின் யாகங்களை அழித்து, அவர்களுக்குப் பெருமளவில் இடையூறு செய்துவந்த மாரீசனின் இந்த வார்த்தைகளைப் பார்த்தால்,மாரீசன் திருந்தி தெளிவு பெற்று விட்டான் என்பது தெரியவரும்.  ராமபாணத்தால் தாக்குண்ட மாரீசன், பல ஆண்டுகள் கடுந்தவம் செய்து பெற்ற ஞானஅனுபவம், அவ்வாறு தெளிவாகப் பேசச்சொல்கிறது அவனை. ஆனால் தீயவன் ஒருவன் திருந்தி வாழும்போது, உறவுகள் அவனை நல்லவனாக விட்டு வைக்காது. இதோ! ராவணன் வந்து விட்டானே!மாரீசன் சொன்ன நல்வார்த்தைகள் எதுவும், ராவணன் காதுகளில் ( இருபது காதுகள் இருந்தும் ) விழவில்லை; மாறாக, ராவணன் மாரீசனை மிரட்டத் தொடங்கினான்;“என்ன பேசுகிறாய்? கைலாய மலையையே தூக்கிய என் ஆற்றல், மனிதர்களின் ஆற்றலுக்கு முன் நிற்காது என்கிறாய்! என் உள்ளத்தை உணராமல், என்னை அவமானப் படுத்திப்பேசுகிறாய்; என் தங்கையை அங்கபங்கப் படுத்தியவரைப் பாராட்டிப் புகழ்கின்றாய். இது முதல்முறையாக இருப்பதால், உன்னை மன்னித்தேன்” என்றான் ராவணன்.ராவணனின் வார்த்தைகளில் கோபம் கொப்பளிப்பதைக் கண்டும், மாரீசன் அஞ்சவில்லை; “ராவணா! நீ கோபப்படுவது என்னிடமல்ல; உன் கோபம் உன்னையும் உன் குலத்தையும் அழித்து விடும். ராமனிடம் பகை கொண்டால், அது உன்னை அடியோடு அழித்து விடும். உன்னை வென்ற கார்த்தவீரியார்ஜுனனைக் கொன்ற பரசுராமனை ஒடுக்கிய ராமனின் வலிமையை, நம்மால் எதிர்க்க முடியுமா?“தவறு செய்யாதே! அமுதம் என்றெண்ணி, விஷத்தைக் குடிக்காதே!உனக்கு நல்லதைத்தான் சொல்கிறேன். உனக்கு மாமனும் உன் குலத்து முதியவனுமான என் வார்த்தையைக்கேள்!” என்று கெஞ்சாத குறையாகச்சொன்னான் மாரீசன்.கேட்பானா ராவணன்; “மாரீசா! உன் தாயைக்கொன்றவனுக்குப் பயந்து, ஓடி ஒளிந்து உயிரைக்காப்பாற்றிக் கொள்ளும் நீ,செத்தவனுக்குச் சமமானவன்! உன்னைப்போய் மனிதனாக மதிக்கலாமா? திசையானைகளை வென்று, தேவர்களைச் சிறைப்படுத்தி, சொர்க்கலோகத்தைக் கொளுத்தி, உலகம் முழுதும் ஆளும் என்னிடம், சின்னஞ்சிறு மனிதர்களைப் போய்… வீரர்கள் அவர்கள் என்கிறாய்!“நான் சொன்னதைச் செய்ய வேண்டியதுதான் உன் வேலையே தவிர, எனக்கு ஆலோசனை சொல்வது உன் வேலையல்ல! நான் இட்ட கட்டளையை நீ நிறைவேற்றாவிட்டால், உன்னைக்கொன்று விடுவேன்! உயிர்மேல் ஆசை இருந்தால், என்சொல் கேட்டு நட!” என்று கோபாவேசமாக மிரட்டினான். மாரீசன் ஒரு தெளிவிற்கு வந்தான்; “ராவணா! உண்மையாகவே உனக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே, உனக்கு நல்லதைச்சொன்னேன். ஏதோ, பயந்து கொண்டு பேசினேன் என்று எண்ணி விடாதே! கெட்டகாலம் வந்தால்,நல்லதுகூடக் கெட்டதாகத்தான் தெரியும்.சரி! நான் செய்ய வேண்டியதென்ன? அதைச்சொல்!” என்றான்.ராமர் சிறுவயதாக இருக்கும்போதே, அவர் அம்பால் அடிபட்டு, தெளிவடைந்து தவம் செய்து திருந்திய மாரீசனின் வார்த்தைகளைப் பார்த்தாலே, அவன் திருந்தி விட்டான் என்பது புரியும். ஆனால், உறவுகள் விட்டால்தானே!ராவணன் சொன்னான்; “நீ பொன் மானாக மாறிப்போய், சீதையின் மனதைக்கவர வேண்டும். சீதைக்காக உன்னைப்பிடிக்க ராமன் வருவான்.நான் போய், சீதையைக்கவர்ந்து வந்து விடுவேன். ஆகையால், நீ பொன்மானாக மாறிப்போ!” என்றான்.பார்த்தான் மாரீசன்;”மானாக மாறிப்போனால்,ராமன் கை அம்பால் முடிவு; போகா விட்டாலோ, ராவணன் கையால் முடிவு!” என்று நடுங்கினான். நடுங்கினால் தப்ப முடியுமா? மானாக மாறிப் போவதற்கு ஒப்புக்கொண்டு போனான் மாரீசன். பொன்மான் வடிவம் கொண்டு, அங்கமெல்லாம் அழகு மின்ன,சின்னஞ்சிறு வாலை ஆட்டி, தலையை அங்குமிங்குமாகத் திருப்பி, பரபரத்த கால்கள் பாவிப்பாவி -தாவித்தாவி, சீதையின் எதிரில் துள்ளிக் குதித்தான்.கண்களைக் கவர்ந்த பொன்மானிடம் மனதைப் பறி கொடுத்த சீதை, ராமரை அழைத்து அதைப்பிடித்துத் தரச் சொன்னாள். ராமர் ஒப்புக்கொண்டார்.ஆனால் லட்சுமணனோ தடுத்தான்; “அண்ணா! இது உண்மையான மான் அல்ல; மாயமான்” என்றான். ஆனால் ராமர் மானைப்பிடித்து வரப் புறப்பட்டார்.பின் தொடர்ந்த லட்சுமணன் வேண்டுகோள் விடுத்தான்;“அண்ணா! மானைப்பிடிக்க என்னை அனுப்புங்கள்!அது மாயமானாக இருந்தால், அதைத் தொடர்ந்து வரும் பகைவர்கள் பலராக இருந்தாலும் சரி! அனைவரையும் நான் கொன்று வருவேன். ஒருவேளை உண்மையான மானாக இருந்தால், அதைப்பிடித்துக் கொண்டு வருவேன். என்னை அனுப்புங்கள்!” என வேண்டினான் லட்சுமணன்.சீதையோ,”நாயக! நீயே பற்றி நல்கலை போலும்” எனக் கண்ணீர் சிந்தினாள்; ராமர்தான் பிடித்துத்தர வேண்டுமாம்!உடனே ராமர் லட்சுமணனிடம், “நானே போய் மானைப் பிடித்து வருகிறேன். சீதைக்குக்காவலாக இங்கேயே இரு நீ” என்று சொல்லி, வில் அம்புகளுடன் மானைப் பின் தொடர்ந்தார். ராமர் வருவதைப் பார்த்த மாரீச மானோ, மெள்ளமெள்ள நடந்தது; திடீரென ஆவேசம் வந்தாற்போல் காதுகளை நீட்டிக்கொண்டு, குளம்புகள் அடி வயிற்றில் படும்படியாகப் பாய்ந்து ஓடியது. மாரீச மானின் ஓட்டத்தை,ஒரு நேர்முக வர்ணனையாகவே பதிவு செய்கிறார் கம்பர்.குன்றிடை இவரும் மேகக் குழுவிடைக் குதிக்கும் கூடச்சென்றிடின் அகலும் தாழின்தண்டலாந் தகைமைத்தாகும்   நின்றதே போல நீங்கும் நிதிவழி நேய நீட்டும் மன்றலங் கோதைமாதர் மனமெனப் போய தம்மான்(கம்ப ராமாயணம்)கைக்கு எட்டுவதைப்போலத் தோன்றி, எட்டாமல் விலகிப்பாய்ந்து விளையாட்டு காட்டிய மானின் உண்மையைப் புரிந்து கொண்டார் ராமர்; அவர் புரிந்து கொண்டதை மாரீசனும் புரிந்து கொண்டான்; “இனி இந்த ராமன் நம்மைப் பிடிக்க மாட்டான்; அம்பைச் செலுத்தி அழித்து விடுவான்” என எண்ணிய மாரீசன், ஆகாயத்தில் தாவத் தொடங்கினான். ஆனால் அதற்குள் ராமர் அம்பைச்செலுத்தி விட்டார்.நெட்டிலைச்சரம் வஞ்சனை நெஞ்சுறப்பட்ட(து) அப்பொழுதே பகு வாயினால்அட்ட திக்கினும் அப்புறமும் புகவிட்டழைத்து ஒரு குன்றென வீழ்ந்தனன்(கம்ப ராமாயணம்)மாரீசனின் வஞ்ச நெஞ்சில், ராம பாணம் பாய்ந்தது. அப்போதே அவன் ராமர் குரலிலே,”சீதா! லட்சுமணா!” என்று திசைகள் எல்லாம் எதிரொலிக்கும்படியாகக் கூவி, மலை விழுவதைப்போல விழுந்தான்; முடிந்தான்.அகத்தியரிடம் மோதியதில் தொடங்கிய மாரீசனின் வாழ்வு, அண்ணல் ராமரின் கைகளால் முடிந்தது. விசுவாமித்திர யாகத்தின் போது, ராமரே மாரீசனை உயிர் பிழைக்கும்படியாக விட்டும்; தவம்செய்த மாரீசன் அற வழியில் நடக்க முயன்றும்; ராவணனின் வற்புறுத்தலால் தவறிழைக்க முற்பட்டு முடிந்துபோன மாரீசனின் வாழ்வு, மனித குலத்திற்கு ஒரு பாடம்.தீயாரைக் காண்பதும் தீதே திருவிலாத்தீயார் சொல் கேட்பதும் தீதே – தீயார் குணங்கள் உரைப்பதும் தீதே அவரோடு   இணங்கி இருப்பதும் தீதே- என்பதற்கு இணங்க தீயவைகளில் இருந்து மட்டுமல்ல; தீயவர்களிடம் இருந்தும் விலகி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் கதா பாத்திரம் ‘மாரீசன்’.(தொடரும்)

You may also like

Leave a Comment

seventeen + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi