Monday, July 8, 2024
Home » காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: சுக்ரீவன்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: சுக்ரீவன்

by kannappan

இதிகாச – புராணங்களின் அமைப்பை, சற்று ஆழ்ந்து நோக்கினால் அவை பிரமிக்க வைக்கும். ஒவ்வொரு  கதாபாத்திரங்களும் தனித்துவம்  பெற்றவை. ராமாயணத்தில் வரும்  கதாபாத்திரம் சுக்ரீவனைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்!அதற்கு முன்னால் 1+1; 1+2; 1+3 என்னும் ஒரு தகவல் கணக்கைப் பார்த்துவிட்டுப் பிறகு சுக்ரீவனிடம் வரலாம். 1+1 = வாலி + சுக்ரீவன். வாலிக்கு ஒரு சகோதரன்  சுக்ரீவன் தவறான நோக்கத்தில் சுக்ரீவனைக் கொல்ல முயன்று,  விரட்டியடித்து தனக்குத்தானே முடிவைத்தேடிக் கொண்டவன் வாலி. 1+2 = ராவணன் + கும்பகர்ணன் +  விபீஷணன். ராவணனுக்கு இரண்டு சகோதரர்கள். தன்னுடன் இருந்த அந்த  இருவரையும் விரட்டி யடித்தான் ராவணன்.  விழி எதிர் நிற்றியேல் விளிதி’என் கண் எதிரில் நின்றால் உன்னை அழித்து  விடுவேன்” என்று விபீஷணனை விரட்டி விட்டான் ராவணன். மற்றொரு சகோதரனான கும்பகர்ணனையும் மனம்  போனபடி பேசினான் ராவணன். வேறுவழியின்றிப் போருக்கு புறப்பட்ட கும்பகர்ணன், ”அண்ணா! நான் வெற்றி பெற்று இங்கு  வருவேன் என்று சொல்லவில்லை. போரில் நான் அழிந்து போய்  விடுவேன். நான் அழிந்த பிறகாவது சீதாதேவியை விட்டுவிடு!  அதுதான் உனக்கு நல்லது” என எச்சரித்துவிட்டு போன கும்பகர்ணன், தான் சொன்னபடியே போரில் இறந்தான்.வென்று இவன் வருவன் என்று உரைக்கிலன்விதி நின்றது பிடர் பிடித்து  உந்த நின்றதுபொன்றுவன் பொன்றினால் பொலன்கொள்தோளியை நன்றென நாயக ! விடுதி ! நன்றரோ(கம்ப ராமாயணம் – யுத்த காண்டம்)ஆகவே ராவணனும் தன்னுடன் இருந்த விபீஷணனை விரட்டி, கும்பகர்ணனை இல்லாமல் செய்து விட்டான். விளைவு?  ராவணனே அழிந்து போனான். 1 + 3 = ராமருடன் உடன்பிறந்தவர்கள் மூவர். பரதன், லட்சுமணன், சத்ருக்னன் எனும் அம்மூவரையும் அன்போடு அரவணைத்துப்போனார் ராமர். சகோதரர்களும் ராமர் சொல் கேட்டு அதன்படியே நடந்தார்கள். வளம் பெற்றார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் நம்மைச்சுற்றி இருப்பவர்களை  தவறாக நினைத்து – வீம்பு பேசி, வாலியைப் போலவோ அல்லது  ராவணனைப் போலவோ விரட்டிவிடக் கூடாது. விபரீதமான  விளைவுகள் நேரிடலாம்.வாலி, வாலியின் மனைவி தாரை. மகன் அங்கதன்.  சகோதரன் சுக்ரீவன். சுக்ரீவன் மனைவி ருமை. ஜாம்பவான்,  நளன், நீலன், குமுதன், துவிதன், ஆஞ்சநேயர் என அனைவரும்  ஒன்றாக இருந்தார்கள்.சரியாகத் திட்டமிடாததன் விளைவு, தவறான முடிவுகள்,  அவற்றை அனுசரித்து எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கைகள் என  அனைத்தும் சேர்ந்து, ஒன்றாக-நன்றாக இருந்த வானரக்  கூட்டத்தை சிதைத்து பிரித்துப் போட்டன. வானரக்கூட்டம் வாலியின் தவறான செயல் களால்  சிதறிப்போனதை, ஏற்கனவே விரிவாகப் பார்த்தோம். சுக்ரீவனைப்  பார்க்கலாம்வாருங்கள்! பல பாடங்கள் கிடைக்கும்.வாலியால் கடுமையாகத் தாக்கப்பட்டு, விரட்டப்பட்ட சுக்ரீவன் ருஷ்யமூக பர்வதத்திற்கு (மலைக்கு) ஓடத் தொடங்கினான். அந்த மலைக்கு வாலியால் வர முடியாது என்பதால் அங்கேயே இருக்க ஆரம்பித்தான். அம்மலையை மதங்கர் மலை என்றும் கூறுவர்.சுக்ரீவன் அங்கு இருந்த காலத்தில் தான், ராம-லட்சுமணர்கள் சீதையைத் தேடிக்கொண்டு வந்தார்கள். அவர்கள்  இருவரும் ருஷ்யமூக மலைக்கு வந்ததற்குக் காரணம், கவந்தனும்  சபரியும். கதிரவன் சிறுவனான கனகவாள் நிறத்தினானை எதிரெதிர் தழுவி நட்பின் இனிதமர்ந்து அவனின் ஈண்ட எதிர்பொரும் தோளினானை நாடுதல் விழுமிதென்றான் அதிர்கழல் வீரர் தாமும் அன்னதேஅமைவதானார்(கம்பராமாயணம்-கவந்தன் வாக்கு)‘‘சுக்ரீவனின் நட்பைப் பெறுங்கள்!” என்பதே கவந்தன் வாக்கின் சாரம். அடுத்து சபரியும் சுக்ரீவனைப் பற்றியே கூறுகிறார்; சுக்ரீவன் இருந்த மலைக்குச்செல்லும் வழியையும் விவரிக்கிறார் சபரி.துணை பரித் தேரோன் மைந்தன் இருந்த அத்துளக்கில் குன்றம்நினைவரிது ஆயற்கு ஒத்தநெறியெலாம் நினைந்து சொன்னாள்(கம்ப ராமாயணம்) சுக்ரீவனை விட, வாலி ஆற்றல் மிகுந்தவன்; வீரன். ஆனால்  கவந்தனும் சபரியும், ‘‘வாலியைப் போய்ப் பாருங்கள்! ”என்று  சொல்ல வில்லை; சுக்ரீவனையே சுட்டிக்காட்டுகிறார்கள். காரணம்? வாலியின் செயல்பாடுகள்; அதற்கும் மேலாக, வாலியின் விதி; ஊழ்வினை; உருத்து வந்து ஊட்டியது; தண்டித்தது. வாலியால் கொலைசெய்ய முற்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட சுக்ரீவனுக்கும்; சீதையைத்தேடி வந்த ராமருக்கும்  அனுமனால் நட்பு உண்டானது. ‘சரண் உனைப்புகுந்தேன்  என்னைத் தாங்குதல் தருமம்’ என்றான்.பிறகென்ன? வாலி ராமபாணத்தால் அடிபட்டுக் கீழே  சாய்ந்தான்; (வாலி வதத்தைப்பற்றி ஏற்கனவே விரிவாகப்  பார்த்திருக்கிறோம்). வாலி கீழே சாய்ந்ததும் வாலியின்  மார்பிலிருந்து ரத்தம் பொங்கிப் பெருகியது. அதைக்கண்ட  சுக்ரீவன் மனதில் சகோதரபாசம் தானே எழுந்தது. வாசத்தாரவன் மார்பு எனும் மலை வழங்குஅருவி ஓசைச்சோரியை நோக்கினன் உடன்பறப்பு என்னும் பாசத்தால் பிணிப்பு உண்டஅத்தம்பியும் பசுங்கண் நேசத்தாரைகள்சொரி தர நெடுநிலம் சேர்ந்தான்(கம்ப ராமாயணம்)ஆம்! சகோதரனின் முடிவிற்காக முயற்சிகள்  அனைத்தையும் செய்து வெற்றிப் பெற்ற சுக்ரீவன், அச்சகோதரன்  கீழே விழுந்ததும் தன்னை அறியாமலே கண்ணீர் விட்டான். அப்படியே தரையில் விழுந்தான். ‘தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்’ என்பது நிரூபணமானது. வாலி விழுந்தவுடன், வாலிமீது சுக்ரீவன் கொண்ட பகையும்   விழுந்தது. வாலியும் நிலைமையும் இதேதான்! எந்த சுக்ரீவனைக்  கொல்ல முயற்சித்து அடித்து விரட்டினானோ, அதே  சுக்ரீவனுக்காகத் தன் மரண காலத்தில் வேண்டுகின்றான் வாலி.ஓவிய உருவ நாயேன் உளதொன்று பெறுவதுன்பால் பூவியல் நறவம் மாந்திப் புந்திவேறுற்ற போது தீவினை இயற்றுமேனும்எம்பிமேல் சீறி என்மேல் ஏவிய பகழி என்னும்கூற்றினை ஏவல் என்றான்(கம்ப ராமாயணம்)ஆம்! வாலி இறக்கும் போது, சுக்ரீவன் மீது அவனுக்குக்   கோபமோ-பகையோ இல்லை. தெளிவாக இருந்தான். ஆனால் சுக்ரீவனோ…வாலி இறந்தபின் லட்சுமணன் மூலமாகசுக்ரீவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்தார் ராமர்.புதிய அரசனுக்கு நீதிபோதனை செய்யும் சம்பிரதாயப்படி, சுக்ரீவனுக்கு நீதி உபதேசங்களையும் செய்து அனுப்பினார் ராமர். அந்த ராமருக்கு உதவி செய்வதாகச் சொன்ன சுக்ரீவனோ, ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்தவுடன் தன்னை மறந்தான்; தான் அளித்திருந்த வாக்குறுதிகளை மறந்தான். அது மட்டுமா? பல காலமாக அனுபவிக்காத சுகங்களில் மூழ்கினான் சுக்ரீவன். அரச பதவி வேறு! கேட்கவேண்டுமா?வாலி தன் மரண சமயத்தில், ‘பூவியல் நறவம் மாந்திப் புந்தி வேறுற்ற போது’ என்று சொன்னானல்லவா? அதை அப்படியே செயல் படுத்தினான் சுக்ரீவன். ஆம்! மது போதையில் மதியழிந்து போனான் சுக்ரீவன்.இந்த நேரத்தில் தான், ‘‘லட்சுமணா! சுக்ரீவன் தான்  கொடுத்த வாக்கை மறந்து விட்டான். போ! அவன் புத்தியில் படும் படியாகச் சொல்லி வா! ”என்று லட்சுமணனை அனுப்பினார் ராமர். கோபத்துடன் வந்த லட்சுமணனைக் கோபம் தணியச் செய்து, மது மயக்கத்தில் கிடந்த சுக்ரீவனைத் தெளியச் செய்து லட்சுமணன் முன்னால் நிறுத்தினார்கள்.  (இந்த இடத்தில்  சுக்ரீவன், மது அருந்துவதால் உண்டாகும் தீமைகளைப் பற்றி விரிவாகச் சொன்னதை, அப்படியே பதிவு செய்திருக்கிறார் கம்பர்)இதன் பிறகு லட்சுமணனிடம் மன்னிப்புக் கேட்ட சுக்ரீவன்,  லட்சுமணனுடன் போய் ராமரிடமும் மன்னிப்பு வேண்டினான்;  சீதாதேவியைத்தேட, திசையெங்கும் வானர வீரர்களை அனுப்பினான். அவ்வாறு போனவர்களில் ஆஞ்சநேயர் சீதாதேவியைக் கண்டு வந்து தகவல் சொல்ல, அனைவருமாகக் கடலில் அணைகட்டி இலங்கை சென்றார்கள்.அங்கே வானர வீரர்களுடன் இருந்த ராமர் சுவேல மலை மீது நின்று இலங்கையைப் பார்த்தார். அதே சமயம் இலங்கையில்  தன் கோபுரத்தின் மீதிருந்து ராவணன்  வானர வீரர்களைப்  பார்த்தான். ராமருடன் நின்றிருந்த சுக்ரீவன், தன் பார்வையில் பட்ட   ராவணனைக் கண்டதும் சீற்றம் கொண்டான்; ‘விசுக்’ கென்று ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ராவணனை அடித்துத் துவைத்த சுக்ரீவன், ராவணனின் மகுடங்களில் இருந்த மணிகளையெல்லாம் அப்படியே பறித்து வந்து, ராமர் திருவடிகளில்  சமர்ப்பித்தான். கூடவே தன் அவசர புத்தியால் செயல்பட்டதற்கு  மன்னிப்பும் கேட்டுக்கொண்டான்.அவன் செயல்களுக்காக ராமர் வருந்தியபோது, சுக்ரீவன், “என்ன செய்து விட்டேன் நான்? ஜடாயு செய்ததைப்  போல, சீதாதேவியைக் காக்க உயிரைத் துறந்தேனா? அல்லது   குகனைப்போல, நதியைக்கடக்க உதவினேனா? ராவணனைக்  கண்டும் சீதாதேவியை மீட்டு வராமல், ராவணனின் தலைகள்  பத்தினதையும் கொண்டு வராமல், வெறுங்கையுடன் அல்லவா வந்திருக்கிறேன்” என்றான். காட்டிலே கழுகின் வேந்தன் செய்ததைக்காட்ட மாட்டேன் நாட்டிலே குகனார் செய்தநன்மையை நயக்க மாட்டேன் கேட்டிலேன்இன்று கண்டும் கிளிமொழி மாதராளை  மீட்டிலேன் தலைகள் பத்தும் கொணர்ந்திலேன்வெறுங்கை வந்தேன்(கம்ப ராமாயணம்)‘‘அது மட்டுமா? அறிவில் சிறந்த ஆஞ்சநேயன் தூது போன போது, வேல்களாலும் அம்புகளாலும் தாக்கிய அவ்வளவு பேர்களையும் தன் வாலின் ஆற்றலால் அடக்கி மீண்ட ஆஞ்சநேயனைப் போலவா செய்தேன்? என் கால்பலத்தைக்காட்டி, ஓடியல்லவா வந்துவிட்டேன்?” என்றான் சுக்ரீவன்.நூல்வலி காட்டும் சிந்தை நுமபெருந் தூதன்வெம்போர் வேல்வலி காட்டுவார்க்கும் வில்வலி காட்டுவார்க்கும் வால்வலி காட்டிப்போந்த வளநகர்ப் புக்கு மற்றென் கால்வலி காட்டிப்போந்தேன் கைவலிக்கு அவதிஉண்டோ?(கம்ப ராமாயணம்) சுக்ரீவன் இவ்வாறு தன்னடக்கத்தோடு சொன்னாலும் அருகில் இருந்த விபீஷணன், ‘‘ராவணனுடைய புகழையே நீ வேரோடு பறித்துக் கொணர்ந்து விட்டாய். பெரும் வெற்றி இது! பெரும் வெற்றி இது! ” என்றான்.இதையடுத்து, போர்க்கள நிகழ்ச்சி! கடுமையாகப் போர் நடந்து கொண்டிருந்த வேளையில், கும்பகர்ணன் சுக்ரீவனைப்  பிடித்துத் தூக்கிச்செல்லத் தொடங்கினான். அவன் பிடியில் அகப்பட்ட சுக்ரீவன் மயக்க நிலை அடைந்தான்.சுக்ரீவனைத் தூக்கிக்கொண்டு கும்பகர்ணன் தப்பி  விடாதபடி, சரக் (அம்பு) கூடம் கட்டித் தடுத்தார் ராமர். ”ராமா! என்னால் பிடிக்கப்பட்ட இக்குரங்கை நீ விடுவித்துவிட்டால், சிறைப்பட்ட சீதையும் மீள்வாள். முடியுமா உன்னால்?” என ராமரிடம் கேட்டான் கும்பகர்ணன். கும்பகர்ணன் வார்த்தைகளுக்குப் பதிலாக இரு   அம்புகளை, அவன் நெற்றியில் செலுத்தினார் ராமர். பின்    நிகழ்ந்ததைக் கம்பர் நேர்முக ஒலிபரப்பு செய்கிறார்.குன்றின் வீழருவியின் குதித்துக் கோத்திழிபுன்தலைக் குருதி நீர் முகத்தைப் போர்த்தலும் இன் துயில் உணர்ந்தென உணர்ச்சிஎய்தினான் வன் திறல் தோற்றிலான் மயக்கம்எய்தினான் கண்டனன் நாயகன் தன்னைக்கண்ணுறாத் தண்டலில் மானமும் நாணும்தாங்கினான் விண்டவன் நாசியும் செவியும்வேரொடும் கொண்டனன் எழுந்து போய்த்தமரைக் கூடினான்(கம்ப ராமாயணம்)இப்பாடல்களை ஒருமுறை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்! போர்க்களத்தில் அப்போது நடந்த நிகழ்வுகள் அப்படியே கண்முன் தோன்றும்; தமிழ்மொழியின் ஆற்றலும் புரியும். கும்பகர்ணன் நெற்றியில் அம்புகள் பாய்ந்ததால், நெற்றியிலிருந்து அருவியைப்போல ரத்தம் பெருக்கெடுத்தது. அது   சுக்ரீவன் முகத்தில் விழ, சுக்ரீவன் மயக்கம் தெளிந்தது. மயக்கம் தெளிந்த சுக்ரீவன், கும்பகர்ணனின் காதையும்  மூக்கையும் பறித்துக் கொண்டுபோய் ராமரிடம் சேர்த்தான்.இவ்வாறு ராவணனுக்கும் கும்பகர்ணனுக்கும் பெருத்த சேதத்தை உண்டாக்கிய சுக்ரீவனுக்கு, ராமரும் தகுந்த மரியாதை   செய்தார். அது சீதையைச் சிறைமீட்டு அயோத்தி திரும்பிப்  பட்டாபிஷேகம் நிகழ்ந்தபோது நடந்தது.சீதா-ராம பட்டாபிஷேகம் அற்புதமாக நடந்தது.   அவரவர்களுக்குத் தகுந்த மரியாதை செய்து வழி அனுப்பி வைத்தார் ராமர். அப்போது, இந்திரன் தசரதருக்கு அளித்திருந்த கடகத்தையும் ஆபரணங்களையும் சுக்ரீவனுக்குத் தந்து வழியனுப்பி  வைத்தார் ராமர்.தொடக்கத்தில் பார்த்ததைப்போல, சுக்ரீவனின் உயிர்ப்பயம். சகோதர பாசம். அவசரம். நன்றிக்கடன் எனப் பலவிதங்களிலும் சுக்ரீவ கதாபாத்திரம் நமக்குப் பாடம் நடத்துகிறது.(தொடரும்)

You may also like

Leave a Comment

3 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi