காதல் மனைவியை கவுரவ கொலை செய்ய திட்டம் : எஸ்பியிடம் கணவர் புகார்

ஈரோடு : காதல் திருமணம் செய்த மனைவியை குடும்பத்தினர் கவுரவ கொலை செய்ய  திட்டமிட்டுள்ளதாகவும், அவரை பாதுகாப்பாக மீட்டு தரக் கோரியும் கணவர் ஈரோடு  எஸ்பியிடம் புகார் அளித்தார்.ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி  சலங்கபாளையம் அரிசன காலனியை சேர்ந்தவர் செல்வன் (29). பி.எஸ்சி.  பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே  நிறுவனத்தில் பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி (23) என்பவர்  பணியாற்றினார். இதனால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு  காதலித்துள்ளனர். இவர்கள் இருவரும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால்  இளமதி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த  2020ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி  திராவிடர் விடுதலை கழக அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன்  முன்னிலையில் பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.  இந்நிலையில், செல்வன் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி சசி மோகனிடம் நேற்று புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள்  திருமணம் செய்த அன்றே எனது மனைவி குடும்பத்தினர், சாதிய அமைப்புகள் எங்களை  தனித்தனியே காரில் கடத்தி சென்றனர். என்னை சாதியை சொல்லி திட்டி அடித்துக்கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து போலீசில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால்,  அப்போதைய அதிமுக முன்னாள் அமைச்சர் தலையீட்டால் அந்த வழக்கு நீர்த்து  போனது. அதிமுக, பாமக போன்ற கடந்த ஆளுங்கட்சியினராலும், சாதி வெறி  கும்பலினாலும் நானும் எனது மனைவியும் சேர முடியாத நிலை ஏற்பட்டது. எனது  மனைவியிடம் பேசும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது, எனக்கு கிடைத்த  தகவலின்படி, எனது மனைவி இளமதி உயிருக்கு ஆபத்து என அறிந்தேன். எனது மனைவியை கவுரவ கொலை செய்யக்கூடிய சூழலில் இருந்து தடுக்கவும், உரிய பாதுகாப்போடு  உயிருக்கு ஆபத்து இல்லாமல் அவரை மீட்டு தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்….

Related posts

மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உரை

திரைப்படத் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்.

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்