காதல் கணவன் விவாகரத்து கேட்டதால் விஷ ஊசியை உடலில் செலுத்தி பெண் டாக்டர் தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காதல் கணவன் விவாகரத்து கோரியதால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் ஒருவர், தனது உடலில் விஷ ஊசி செலுத்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் கே.கே.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கே.கே.நகர் அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் லோகித்சாய் (28). கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது, உடன் படித்த ராயலட்சுமி (27) என்பவரை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது ராயலட்சுமி, கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த டாக்டர் ராயலட்சுமி மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. மேலும், இதற்காக சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர்கள் ஆலோசனைப்படி மருந்து எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையல், லோகித் சாய் தனது மனைவி ராயலட்சுமியிடம் விவாகரத்து கேட்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் மாலை வக்கீல் ஒருவரை பார்த்துவிட்டு வரலாம் என்று மனைவியை அழைத்துள்ளார். இது ராயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். ஆனாலும், லோகித் சாய், வழக்கறிஞரிடம் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார்.இதனால் மனமுடைந்த ராயலட்சுமி, வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று, கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லோகித் சாய் பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. உடனே லோகித் சாய் குடியிருப்பில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, படுக்கையில் ராயலட்சுமி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகே இதய அடைப்பை ஏற்படுத்தும் மருந்து மற்றும் ஊசி கிடந்தது. அவரது கையில் ஊசி குத்தியதற்கான தழும்பும் இருந்தது.அதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர், உடனே மனைவியை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த கே.கே.நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி செய்த மருந்து மற்றும் ஊசியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்