காதலி கொடுத்த ஜூஸ் குடித்த கல்லூரி மாணவர் சாவில் மர்மம் நீடிப்பு

திருவனந்தபுரம்: குமரி-கேரள எல்லையிலுள்ள பாறசாலை மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு படித்து வந்தார். களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி ஷாரோன் ராஜை அவரது காதலி போனில் அழைத்து, பெற்றோர் வெளியே சென்று விட்டதால் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய நண்பர் ரெஜின் என்பவருடன் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ஷாரோன் ராஜ் தன்னுடைய வயிறு வலிப்பதாக நண்பரிடம் கூறியுள்ளார். தன்னுடைய காதலி குடிப்பதற்கு கஷாயமும், ஜூசும் தந்ததாக கூறிய அவர், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தார். மறுநாள் அவரது வாயில் புண்கள் ஏற்பட்டன. இதை தொடர்ந்து அவரை பாறசாலை அரசு மருத்துவமனையிலும், உடல்நிலை மோசமானதை தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் கடந்த 25ம் தேதி ஷாரோன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மரணத்திற்கு முன்பாக இவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் படிப்படியாக செயலிழந்ததால் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் பாறசாலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ஷாரோன் ராஜிடம் விசாரணை நடத்தினர். பாறசாலை மாஜிஸ்திரேட்டும் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது காதலி தனக்கு கஷாயம் மற்றும் ஜூஸ் கொடுத்த விவரத்தை அவர் கூறினார். இதையடுத்து ஷாரோன் ராஜின் காதலியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தான் முதுகுவலிக்காக கஷாயம் குடிப்பதாகவும், அதைத்தான் ஷாரோன் ராஜுக்கு கொடுத்ததாகவும், பின்னர் குடிப்பதற்கு ஜூஸ் கொடுத்ததாகவும், அதில் விஷம் கலக்கவில்லை என்றும் போலீசிடம் கூறினார். ஆனால் அவர் கூறியதை போலீசார் நம்பவில்லை.இதற்கிடையே ஷாரோன் ராஜின் பிரேத பரிசோதனையில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்றும், கூடுதல் பரிசோதனைக்காக உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான முடிவு வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்றும் பாறசாலை போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் பாறசாலை போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்பதால் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக ஷாரோன் ராஜின் பெற்றோர் கூறியுள்ளனர்….

Related posts

பெண் மருத்துவர் கொலை நடந்து ஒரு மாதம் நிறைவு; மேற்குவங்கத்தில் விடியவிடிய போராட்டம்: மம்தா அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு

40 வயது ஆசாமியுடன் சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: கேரளாவில் பரபரப்பு

காஷ்மீர் இந்து வாக்காளர்களை பா.ஜ.க மிரட்டுவதாக புகார்; தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என பருக் அப்துல்லா கேள்வி