காண்டூர் கால்வாய் கான்கிரீட் பணி இந்த மாத இறுதியில் முடியும்

 

உடுமலை, ஆக. 2: காண்டூர் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி இந்த மாத இறுதியில் முடியும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு, பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. காண்டூர் கால்வாய் அடர் வனப்பகுதி வழியாக வருவதால், மழைக்காலங்களில் பாறைகள் சரிந்தும், கரை உடைந்தும் பாதிப்பு ஏற்பட்டது.

பல இடங்களில் கால்வாய் கரைகள் சிதிலமடைந்ததால், தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கால்வாயை புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, காண்டூர் கால்வாயில் தரைதளம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது, பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் ராட்சத கிரேன் மூலம் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் வேகமாக நடக்கின்றன. இதனால் இந்த மாத (ஆகஸ்ட்) இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு