காணாமல் போன கணவரை தேடி ஊர் ஊராக அலையும் மனைவி: ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம்

வாழப்பாடி: காணாமல் போன கணவரை ஊர் ஊராக தேடி மனைவி அலைந்து வருகிறார். கணவரை கண்டுபிடிக்க, ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து பிரசாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும் வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கேட் பகுதியைச்சேர்ந்தவர் சிவராமன் (வயது 45). இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலை செய்து வந்தார்.இவருக்கு திருமணமாகி பழனியம்மாள் என்ற மனைவியும், குழந்தைகள் உள்ளனர்.சிவராமன் செய்யும் வேலையில் குறைந்த வருமானமே கிடைத்து வந்த நிலையிலும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகுந்த பாசத்தோடு இருந்து வந்தார். இதற்கிடையே இவருக்கு சிறிது உடல்நிலை பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி காலை முத்தம்பட்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து வாழப்பாடிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. தனது கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பழனியம்மாள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார். ஆனால், அவர் எங்கும் கிடைக்கவில்லை.  இதனால் மிகவும் மனமுடைந்து போன பழனியம்மாள், வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், சிவராமன் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பழனியம்மாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கணவரைப் பற்றி விசாரிப்பதும், போலீசார் அவரைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறுவதும் வாடிக்கையாக இருந்தது. குழந்தைகளும் அப்பா எப்போது வருவார் என்று கேட்டு பழனியம்மாளை தொல்லை செய்து வந்தனர். இதனால், போலீசை மட்டும் நம்பிப் பயனில்லை என்று முடிவெடுத்த பழனியம்மாள், காணாமல் போன தனது கணவரை கண்டுபிடிக்க, ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும் தேடி வருகிறார். பழனியம்மாள், தனியொரு பெண்ணாக ஊர் ஊராக ஆட்டோவில் சென்று, தனது கணவரின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, ஒரு வாரத்திற்கு மேலாக சரியாக உணவு கூட உண்ணாமல், கண்ணீர் மல்க பொதுமக்களிடம் காண்பித்து தேடி வருவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் செல்லுமிடமெல்லாம், பொதுமக்கள், ‘‘உங்கள் கணவர் பத்திரமாக வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறோம். ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்’’ என்று பழனியம்மாளுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர். கை பட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம் என்று தேவையில்லாத, ஒன்றுக்கும் உதவாத விஷயங்களுக்கு எல்லாம் தம்பதிகள் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் காணாமல் போன கணவரை ஊர் ஊராக தேடி மனைவி அலைவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!

பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம்: நீதிபதி பவானி சுப்பராயன்!