காட்பாடியில் இருந்து திருவலம் செல்லும் பஸ் படிக்கட்டு, ஜன்னலில் தொங்கி செல்லும் மாணவர்கள்

வேலூர்: காட்பாடியில் இருந்து திருவலம் செல்லும் அரசு பஸ் ஜன்னல் கம்பி மீது அமர்ந்து பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. பஸ் பாஸ் இல்லாவிட்டாலும் பள்ளி சீருடை அணிந்திருந்தால் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் காலை உணவு, மதிய உணவு, கல்வி உபகரணங்கள், சீருடைகள், செருப்பு, மடிக்கணினி உள்ளிட்டவற்றையும் அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதற்கு காரணம் அனைத்து மாணவர்களும் படித்து முன்னேற வேண்டும் என்பதுதான். பெரும்பாலான படிப்பறிவு இல்லாத பெற்றோரும்கூட தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கிகூட படிக்க வைக்கின்றனர். ஆனால் இதை பெரும்பாலான மாணவர்கள் சரிவர பயன்படுத்திக்கொள்வதில்லை. குறிப்பாக பஸ்கள் காலியாக இருந்தாலும் கூட பள்ளி மாணவர்கள் கூட படிக்கட்டில் தொங்கி செல்வதை ஜாலியாக கருதுகிறார்கள். மேலும் சாகசம் காட்டவும் செய்கின்றனர். கண்டக்டர், டிரைவர் எவ்வளவு கூறினாலும் கண்டுகொள்வதில்லை. மேலும் சில மாணவர்கள் அவர்களிடம் தகராறு செய்கின்றனர். இதனால் சில கண்டக்டர்கள் கண்டுகொள்வதில்லை. இந்த காட்சி எல்லா வழித்தடங்களிலும் தினமும் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு  உதாரணமாக சில நாட்களுக்கு முன் வேலூர் அண்ணா சாலையில் சென்ற பஸ்சில் மாணவர்கள் தொங்கிச்சென்றதை வேலூர் கலெக்டரே பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்களுக்கு அறிவுரை கூறினார். ஆனாலும் இதற்கு தீர்வு இல்லை. இந்நிலையில் நேற்று காட்பாடியில் இருந்து பிரம்மபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் பயணித்த பள்ளி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடியும், பஸ்சின் ஜன்னல் கம்பிகள் மீது அமர்ந்தவாறும் மிக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இதுகுறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. எனவே மாணவர்களின் இந்த செயலை பெற்றோர் தடுக்க வேண்டும். அல்லது அதிகாரிகள் கடும் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் அதிகம் உள்ள வழித்தடங்களில், பள்ளி, கல்லூரி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்….

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை