காட்டு முயலை வேட்டையாடிய இளைஞர் கைது

திண்டிவனம், ஜூலை 4: திண்டிவனம் அருகே காட்டு முயலை வேட்டையாடிய நபரை வனத்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, பைக், முயல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திண்டிவனம் மரக்காணம் ரோடு, ஆத்தூர் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்த இருவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது பையில் இறந்த நிலையில் காட்டு முயல் இருந்தது தெரியவந்தது. வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது பைக்கில் வந்த இருவரில் ஒருவர் வனத்துறையினரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொரு இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் திண்டிவனம் நத்தைமேடு பகுதியை சேர்ந்த பாபு மகன் சூர்யா(25) என்பதும், தப்பி ஓடிய நபர் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் அஜித்(27) என்பதும் தெரியவந்தது. மேலும் சூர்யா மீது இதற்குமுன் மான்கறி விற்பனை செய்து வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. சூர்யா மீது வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் முயல், நாட்டுத்துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பி ஓடிய அஜித்தை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை