காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ஆமை வேகத்தில் நடக்கும் இருளர் குடியிருப்பு பணி: விரைந்து முடிக்க கோரிக்கை

பெரும்புதூர், ஏப்.28: காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ஆமை வேகத்தில் நடக்கும் இருளர் குடியிருப்பு பணிகளை விரைந்து முடித்து, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியம், காட்டரம்பாக்கம் ஊராட்சியில் 31 இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிசை வீடுகளில் வசித்து வருவதால், கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, காட்டரம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் இருளர் சமூகத்தை சேர்ந்த 31 குடும்பங்களுக்கும், அதே பகுதியில் வீடு கட்டித்தர தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான இடம் ஒதுக்கீடு மற்றும் தலா ஒரு வீட்டிற்கு ₹4.90 லட்சம் மதிப்பில் தனித்தனி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. இப்பணி கடந்த ஆண்டு தொடங்கியது.

இந்நிலையில் இந்த வீடு கட்டும் பணி நடந்த 4 மாதகளாக மந்தகதியில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: காட்டரம்பாக்கம் பகுதியில் வீடுகளில் இன்றியும் குடிசை வீட்டில் வசிக்கும் 31 இருளர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வரப்பிரசாதமாக தமிழக அரசு வீடு கட்டித்தர உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு வீடுகள் கட்டும் பணி தொடங்கி, ஜனவரி மாதம் பணிகள் முடிந்து, பயனாளிகளுக்கு வீடு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால், வீடுகள் கட்டும் பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகளை துரிதப்படுத்தி பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சென்றார். ஆனால், அதிகாரிகள் மெத்தன போக்கோடு நடந்து வருகின்றனர். இதேபோல், கடந்த மாதம் தமிழக செயலர் இறையன்பு வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அடுத்தடுத்து அதிகாரிகள் பார்வையிட்டு சென்றாலும் பணிகள் மட்டும் நடந்து முடியவில்லை. வீடுகளுக்கு மின் இணைப்பு, செப்டிக் டேங்க், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு உள்ளிட்ட வசதி எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. வீடு கட்டி முடிக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகள் கட்டி முடிக்க இன்னும் 2 மாதங்களுக்கு மேலாகும் என்று கட்டுமான பணி ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஜனவரி மாதம் முடிக்க வேண்டிய பணி 3 மாதங்கள் காலதாமதமாகிய நிலையில் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. எனவே, இதனை காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்தி மழை காலத்திற்கு முன்பாக இருளர் மக்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இது குறித்து கட்டுமான நிறுவன ஊழியரிடம் கேட்டபோது, ‘ பெரும்புதூர் ஒன்றிய பொறியாளர் உத்தரவின்பேரில் பணிகள் நடைபெற்று வருகிறது.

வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கபட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் பைப்புகள் அமைத்தால் வீடுகள் முழுமைபெறும். ஆனால், இன்று வரை கட்டி முடிக்கப்பட்டதற்கான பணம் ஒரு ரூபாய் கூட எங்களுக்கு வந்து சேரவில்லை. ஆனாலும் நாங்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்’ என்றார்.இதுகுறித்து ஒன்றிய பொறியாளர் ரம்யாவிடம் கூறுகையில், ‘இருளர் குடியிருப்பு எந்த திட்டத்தின் கீழ் கட்டபட்டு வருகிறது, ஒதுக்கபட்ட நிதி குறித்து கேட்டதற்கு எனக்கு எதுவும் சரியாக தெரியவில்லை. ஊராட்சி தலைவரிடம் கேட்டு சொல்கிறேன்’ என்றார்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’