காஞ்சியில் பராமரிப்பில்லாத சிசிடிவி கேமராக்களால் குற்ற சம்பவங்களை கண்காணிப்பதில் தொய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பராமரிப்பில்லாமல் உடைந்து காணப்படுவதால், குற்ற சம்பவங்களை கண்காணித்து தடுப்பதில் தொய்வு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை கண்காணிக்க அனைத்து ஊராட்சிகளிலும் முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அந்தந்த கிராம ஊராட்சிகள் சார்பாக முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அருகில் உள்ள காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், காஞ்சிபுரம் – உத்திரமேரூர் கீழ் ரோடு மாநில சாலையில் கீழ்கேட் பகுதியில் தொடங்கி ஓரிக்கை, குருவிமலை, களக்காட்டூர், ஆற்பாக்கம், மாகறல் உள்ளிட்ட கிராமங்களில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்படி பொருத்தப்பட்ட கேமராக்கள் உரிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்தும், செயலிழந்தும் உள்ளதாக கூறப்படுகிறது. ஓரிக்கை உள்ளிட்ட சில பகுதிகளில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள், தற்போது சாலையை கண்காணிக்காமல் வெவ்வேறு திசையில் திரும்பியும், தலைகீழாக தொங்கிய நிலையிலும் உள்ளன. இதனால், குற்ற சம்பவங்களை கண்காணிப்பதில் தொய்வும், தாமதமும் ஏற்படும் நிலை உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குருவிமலை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது பல சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில் இல்லாததால் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிவதில் சிரமம் அடைந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்க இயலாத நிலையில் தற்போது, இந்த குடும்பம் நிர்கதியாக உள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்க, ஊராட்சி நிர்வாகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* காவல் துறையின் நண்பன் சிசிடிவி கேமரா
பெரும்பாலான குற்ற சம்பவங்களில் சாட்சி கிடைக்காத நிலையில் உறுதியான ஆதாரமாக கிடைக்கும் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்தே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை நெருங்க முடிந்தது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

* குழு ஏற்படுத்த வேண்டும்
கண்காணிப்பு கேமரா பொருத்துவதால் குற்றங்கள் குறைவதோடு, குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும். அந்தந்த பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல்துறையினர் என 2 தரப்பினர் அடங்கிய கூட்டுக்குழு ஏற்படுத்தி சிசிடிவி கேமரா செயல்படுவதை மாதந்தோறும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் குற்றச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

* ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது…
காஞ்சிபுரத்தில் கடந்த ஜூன் 18ம்தேதி பெண் காவலரை, அவரின் கணவரே குத்தி கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் புதுச்சேரி தப்பிச்சென்றார். பின்னர், மீண்டும் காஞ்சிபுரம் நோக்கி வந்த அவரின் கணவரை அங்கிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். சிசிடிவி கேமரா இருந்தால் குற்றவாளிகள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்பது நிதர்சனமான உண்மை என்றால் அது மிகையாகாது. சிசிடிவி கேமரா ஒரு 3வது கண்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை