காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆயிரம் பயனாளிகளுக்கு மகளிர் உரிமை தொகையினை முதல்வர் நாளை வழங்குகிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம், செப்.14: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆயிரம் பயனாளிகளுக்கு, மகளிர் உரிமை தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கையின்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். இதனால், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் விழா சிறப்பாக நடைபெறுவதற்காக பிரம்மாண்டமான விழா பந்தல் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இவ்விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, திமுக சார்பில் மகளிருக்கு மாதம் தோறும் ₹1000 வழங்கப்படும் என அறிவித்தோம். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, காஞ்சிபுரம் மண்ணில் பிறந்த அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ம் தேதியான நாளை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. மகளிரிடமும், பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள வரலாற்று சிறப்புக்குரிய இத்திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உளுந்தை கிராமத்திலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம் வரும் வழியில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ராஜகுளம், பொன்னேரிகரை ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பின்னர், காஞ்சிபுரம் மாநகராட்சி முன்பாகவுள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

இதனையடுத்து, அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்று பார்வையிடுவதுடன் அங்குள்ள அவரது உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதன் பின்னரே விழா மேடைக்கு வந்து மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடக்கி வைக்கிறார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆயிரம் பயனாளிகளுக்கு, மகளிர் உரிமை தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிறார். மேலும், விழாவிற்கு வரும் மகளிருக்கும், பொதுமக்களுக்கும் காலை உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கார்களை நிறுத்த வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் நலத்திட்டங்கள் குறித்த கையேடு ஒன்று விழாவிற்கு வரும் அனைத்து மகளிர்க்கும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார். ஆய்வின்போது, கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜி பொன்னி, போலீஸ் எஸ்பி சுதாகர், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’