காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 11 நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 11 இளம்பெண்கள் திடீர் மாயம்: சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி; போலீசார் விசாரணை

காஞ்சிபுரம், பிப்.10: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என 11க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக பதிவான வழக்குகளால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம். வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் படிக்கும் மாணவிகள் பள்ளிப் படிப்பு முடிந்ததும் உயர்கல்வி தொடராமல் சுங்குவார்சத்திரம். மாங்கால் கூட்டு சாலை, படப்பை, ஒரகடம், பெரும்புதூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், தனியார் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வது அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் பிளஸ் 1, பிளஸ் 2, கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவிகள் பல்வேறு காரணங்களால் மாயமாகும் நிலையும் அதிகரித்துள்ளது. இதனால், பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜன.28ம் தேதி முதல் பிப்.8ம் தேதி வரை கடந்த 11 நாட்களில் காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் 4 வழக்குகள், சிவகாஞ்சி, பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகள், பெருநகர், உத்திரமேரூர், சாலவாக்கம் காவல் நிலையங்களில் தலா 1 வழக்கு என மொத்தம் 11 வழக்குகள் பெண்கள் காணாமல் போனதாக பதிவாகி உள்ளன. இதில், 17 முதல் 20 வயதையொட்டிய பெண்கள் 5 பேர், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வழக்குகள் பதிவாகாமல் வேறு சில சம்பவங்களும் நடந்திருக்கக் கூடும் என்ற அச்சமும் உள்ளது. இதற்கு செல்போன் முக்கிய காரணமாக கருதப்படும் நிலையில் அதனை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து போதிய விழிப்புணர்வு மாணவிகளுக்கு இல்லாதநிலை உள்ளது.

தற்போது, தமிழக அரசு பெண்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால், கிராமப்புற மாணவிகளும் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பல கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்பேசி வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த செல்போன்கள் மூலம் தணிக்கையற்ற பாலியல் உணர்வை தூண்டும் விளம்பரங்கள் மாணவ, மாணவிகளை சென்றடைவதால் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து காஞ்சிபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ‘சினிமா உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள் பதின்பருவ கிளர்ச்சியை அதிகப்படுத்துவதாக உள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரைகளில் காட்டப்படும் வாழ்க்கையின் ஒரு பகுதியான, காதல், உல்லாச காட்சிகளை பார்த்துவிட்டு அதுதான் யதார்த்தம் என நம்பி அதைப்போல் நடக்க முயற்சி செய்து தவறான நபர்களிடம் சிக்கிக் கொள்ளும் போக்கு தற்போது அதிக அளவில் நடைபெற தொடங்கி உள்ளது.

எனவே, சிறுவயது திருமணம் உடலுக்கு, மனதிற்கு, சமுதாயத்திற்கு கேடு என்பதை பள்ளிகளில் பாடமாகவோ, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமோ செயல்படுத்த வேண்டும்’ என்றார். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, பள்ளி, கல்லூரி மாணவிகள் இளம்பெண்கள் காணாமல் போன வழக்குகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு மாணவிகள், பெண்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுகிறோம்’ என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், விடுமுறை நாட்களில் பள்ளிக்கு செல்வதாக கூறும் மாணவிகள் மற்றும் பள்ளி நாட்களில் தாமதமாக வீடு திரும்பும் மாணவிகளிடம் பெற்றோர் கவனமுடன் நடந்துகொள்ளவேண்டும். சில மாணவிகள் சிறப்பு வகுப்பு என்று சொல்லிவிட்டு இனம்புரியாத ஈர்ப்பில் ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லும் போக்கு சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இது போன்ற விஷயங்களை பெற்றோர்தான் கவனமுடன் கையாளவேண்டும்’ என்றனர். எனவே, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்று மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் போலீசார் பாலியல் விழிப்புணர்வு, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் காணாமல் போகும் விவகாரம் தனிநபர் பிரச்சினை என்ற ரீதியில் அணுகாமல், சமுதாய சீர்கேட்டின் அடையாளமாக கருதி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜன.28ம் தேதி முதல் பிப்.8ம் தேதி வரை கடந்த 11 நாட்களில் காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் 4 வழக்குகள், சிவகாஞ்சி, பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகள், பெருநகர், உத்திரமேரூர், சாலவாக்கம் காவல் நிலையங்களில் தலா 1 வழக்கு என மொத்தம் 11 வழக்குகள் பெண்கள் காணாமல் போனதாக பதிவாகி உள்ளன.

துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்
சின்ன காஞ்சிபுரம் மலையாள தெருவை சேர்ந்தவர் சந்திரபாபு மகன் சரவணன் (38). இவருக்கு திருமணம் ஆகி கலைமணி (30) என்ற மனைவியும், மிதுன் கிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். இவர் காஞ்சிபுரம் எண்ணெய்க்காரத் தெருவில் வாடகைக்கு இடம் எடுத்து மனைவி கலைமணி பெயரில் 4 ஆண்டுகளாக பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இந்த பிரிண்டிங் பிரஸ்சில் சரவணனுக்கு உதவியாக இருந்த மனைவி கலைமணி கடந்த ஆண்டு அக்.29ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரின் கணவர் சரவணன் அளித்த புகாரின்பேரில் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் அக்.30ம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏறக்குறைய 100 நாட்கள் ஆன நிலையிலும், மாயமான இளம்பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்