காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில், கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 284 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு மின் விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில், வருமானம் ஈட்டும் தாய், தந்தையர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட பெற்றோரின் மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், தலா ரூ.75 ஆயிரம் வீதம், 10 மாணவ – மாணவிகளுக்கு குறித்த கால வைப்புத் தொகைக்கான ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்திற்கான பத்திரங்கள் வழங்கப்பட்டன.

வாலாஜாபாத் வட்டம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ.50 ஆயிரம் வீதம், 3 பயனாளிக்கு ரூ.1 லட்சத்து, 50 ஆயிரத்திற்கான தொழிற்கல்வி உதவித்தொகையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, காஞ்சிபுரம் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்