காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழையால் 114 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம், நவ.17: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம், பெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் வெறிச்சோடி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது.

மேலும், காஞ்சிபுரம் மாதா கோயில் தெரு, தாமல்வார் தெரு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோயில் தெரு மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவா கூட்டை தெரு, லிங்கப்பன் தெரு, முருகன் காலனி, பல்லவர் மேடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வரத்து கால்வாய்கள் மூலம் நீர்வரத்து வந்துக்கொண்டு இருக்கிறது. இந்த மழையின் காரணமாக உள்ளாவூர் மதகு ஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழையசீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம் ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல் சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தாவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வேளியூர் சித்தேரி ஆகிய 114 சிறிய ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

அந்த வகையில், ஏரியில் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் பகுதியில் 381 ஏரிகள் உள்ளன. இதில் மேற்கூறிய 44 ஏரிகள் 100 சதவீதமும், 28 ஏரிகள் 75 சதவீதமும் நிரம்பியது. மேலும், 63 ஏரிகள் 50 சதவீதமும், 175 ஏரிகள் 25 சதவீதமும் எட்டியுள்ளது. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில், 70 ஏரிகள் 100 சதவீதமும், 129 ஏரிகள் 75 சதவீதமும், 171 ஏரிகள் 50 சதவீதமும், 110 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. இதில், சென்னை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு நீர் பாசனமாகவும் விளங்கக்கூடிய பெரிய ஏரிகளான தாமல், பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, மணிமங்கலம், உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளான மதுராந்தகம் ஏரி, செங்கல்பட்டு கொளவாய், தையூர், மானாமதி, கொண்டங்கி உள்ளிட்ட ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது