காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

காஞ்சிபுரம்: காஞ்செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று பல்வேறு பகுதிகளில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடந்தது. தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது கடந்த ஓராண்டாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் நவம்பர் மாத கால வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தற்போதே மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட துவங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களிலும் தன்னார்வலர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பேரிடர் மையம் மூலம் தனி வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி பயிற்சி அளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட வருவாய்  அலுவலர் சிவருத்தரய்யா தலைமையில், ஐந்து இடங்களில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது. வாலாஜாபாத் ஒன்றியத்தில் வில்லிவலம் கிராமத்தில் பாலாறு கரையோர பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கும் மனிதர்கள், விலங்கினங்களை மீட்பது குறித்து ஒத்திகை  பயிற்சி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, தாசில்தார் லோகநாதன் முன்னிலையில் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் முன்னிலையில், வரதராஜபுரம் மகாலட்சுமி நகர் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை ஆட்டோ மூலம் ஒலிக்கபப்பட்டு, பொதுமக்களை பத்திரமாக தங்குமிடங்களுக்கு அழைத்து செல்லுதல் நிகழ்ச்சியும், புவனேஸ்வர் நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை படகு மூலம் மீட்கும் ஒத்திகையும், சிங்காடிவாக்கம் பகுதியில், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு முன்னிலையில், தனியார் வேதியியல் தொழிற்சாலையில் வெள்ள நீர் சூழ்நிலைகள், தொழிலாளர்களை பாதுகாத்துடன் அழைத்து வருதல் நிகழ்ச்சியும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கீழ் தளத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்த்தல் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.மாமல்லபுரம்: மாமல்லபுரம்,  கடற்கரை கோயிலை ஒட்டி வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்து விழிப்புணர்வு மாதிரி ஒத்திக்கை பயிற்சி நேற்று நடந்தது. இந்த, ஒத்திகை நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு கலால் உதவி ஆணையர் லட்சுமணன் தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உதவி அலுவலர் திருநாவுக்கரசு வரவேற்றார். அப்போது, மழை, தீ மற்றும் கட்டிட இடிபாடுகள் போன்ற பேரிடர் பாதிப்புகளில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை மிதவை படகுகள், உயிர் காக்கும் மிதவை உபகரணங்கள், கட்டிட இடர்பாடுகள், அவசர கால மீட்பு எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள், தீயணைப்பான்கள் உள்ளிட்ட நவீன எந்திரங்களை கொண்டு எப்படி மீட்பது? என்பது குறித்து ஒத்திகை மூலம் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்தன், செய்யூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார் ஆகியோர், பேரிடர் தணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து, தீயணைப்பு நவீன கருவிகளை எப்படி கையாள்வது? என்பது குறித்தும் செங்கல்பட்டு கலால் உதவி ஆணையர் முன்னிலையில் மாமல்லபுரம் மற்றும் செய்யூர் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.மேலும், வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படுகிற புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய படூர் ஊராட்சியில் வருகின்ற வடகிழக்கு பருவ மழையை ஒட்டி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வெள்ளப்பெருக்கு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் லலிதா தலைமை தாங்கினார். திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் முன்னிலையில் வருவாயத்துறை ஊழியர்களும், பேரிடர் மேலாண்மைத் துறை ஊழியர்களும் படூர் ஈசா ஏரியில் நடைபெற்ற இந்த வெள்ளப்பெருக்கு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ரப்பர் படகு மூலம் வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்டல், மீட்கப்பட்ட பொதுமக்களுக்கு முதலுதவி மற்றும் உணவு, மருந்துகள் வழங்குதல், அவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை செல்லுதல் ஆகியவற்றை தத்ரூபமாக செய்து காட்டினர். இந்த ஒத்திகை நிகழ்வில், கேளம்பாக்கம் மண்டல துணை வட்டாட்சியர் கார்த்திக் ரகுநாத், வருவாய் ஆய்வாளர்  ரமேஷ், சிறுசேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலைய அலுவலர் முருகன், கேளம்பாக்கம் மருத்துவமனை மருத்துவர்கள், மாம்பாக்கம் கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள், காவல் துறையினர் கலந்துக் கொண்டு மீட்புப் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்