காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50, குன்றத்தூர் நகராட்சி 30, மாங்காடு நகராட்சி 27, பெரும்புதூர் பேரூராட்சி15, வாலாஜாபாத் பேரூராட்சியில் 15, உத்திரமேரூர் பேரூராட்சி18 என மொத்தம் 155 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிகளுக்கு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 384 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. அதில் 88 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு 29 நுண் பார்வையாளர்களை நியமித்து, வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், எஸ்பி சுதாகர் தலைமையில் 2 ஏடிஎஸ்பி, 8 டிஎஸ்பி, 20 இன்ஸ்பெக்டர்கள், 100 எஸ்ஐக்கள் என 1056 காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  மேலும் 23 நடமாடும் கண்காணிப்பு குழு, தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வாக்குச்சாவடி மையத்துக்கு வந்த வாக்காளர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கிருமி நாசினி மற்றும் கையுறை வழங்கப்பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, காலனி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு முறையாக நடக்கிறதா என பார்வையிட்டார். மேலும் தேர்தல் அமைதியாக நடைபெற வாக்குப்பதிவு அலுவலர்கள் உள்பட அனைவரும் தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது அவருடன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் இருந்தனர். முன்னதாக கலெக்டர் ஆர்த்தி தாம்பரம் மாநகராட்சியில் உள்ள தனது வாக்கினை தபால் வாக்காக செலுத்தினார். அதேபோல், மாவட்டத்தில் உள்ள 88 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எஸ்பி சுதாகர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற கண்ணியத்துடன் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுநிலையோடு பணிபுரியவேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும் வாக்குச்சாவடிகளில் கொரோனா தொற்று விதிமுறைகள் மற்றும் தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். உடன் ஏடிஎஸ்பி கணேஷ், சாந்தாராம் ஆகியோர் இருந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 18வது வார்டு கவுன்சிலருக்கு திமுக சார்பில் போட்டியிட்டமல்லிகா ராமகிருஷ்ணன், அவரது கணவரும் திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளரும், திமுக சார்பில் 18வது வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்ட வி.எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் காஞ்சிபுரம் சீனிவாசா நகராட்சி பள்ளியில் குடும்பத்தினருடன் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அதேபோல், காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சாந்தி சீனிவாசன் ஏகேஜி நடுநிலைப் பள்ளியில் தங்களின் வாக்கினை செலுத்தினர்.செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியின் 33 வார்டுகளுக்கு 71 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. குண்டூர் அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரிய நத்தம் வடமலை நகராட்சி ஆரம்பப்பள்ளி உள்பட 11 வாக்குச்சாவடிகள் என மாவட்டம் முழுவதும் 200 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டன. அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.அதேபோல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பு கம்பெனியான பெல் நிறுவன பொறியாளர்கள், வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால் அவற்றை உடனடியாக சரி செய்வதற்காக தயார் நிலையில் இருந்தனர். இதற்கிடையில், வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் செங்கல்பட்டு பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை நேற்று சென்று பார்வையிட்டார். செங்கல்பட்டு நகராட்சியில் எவ்வித பதற்றமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.இதற்கிடையில், செங்கல்பட்டு அருகே அனுமந்தபுத்தேரி நகராட்சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கலெக்டர் ராகுல்நாத் தனது வாக்கை பதிவு செய்தார். மறைமலைநகர் நகராட்சி 12வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட நகர திமுக செயலாளர் ஜெ.சண்முகம், புனித சூசையப்பர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தனது வாக்கை பதிவு செய்தார்.மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி 2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் நகர மன்ற தலைவ மலர்விழி குமார், செல்லியம்மன் கோயில் தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.சுழற்சி முறையில் கண்காணிக்க டிஐஜி உத்தரவுவாலாஜாபத் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 58 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையொட்டி, அரசு பள்ளிகளில் 17 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், பதற்றமான 4 வாக்குச்சாவடி மையங்களில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.தேர்தல் பாதுகாப்பு பணியை காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா நேரில் பார்வையிட்டார். அப்போது, வாக்குச்சாவடிகளில் வசதிகள், பாதுகாப்பு குறித்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அசம்பாவிதம் நடக்காமல் இருக்க சுழற்சி முறையில், வாக்குச்சாவடி மையங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். அவருடன், ஏடிஎஸ்பி ஜெயராமன், டிஎஸ்பி பிரவீன்குமார், வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் இருந்தனர்.தேர்தல் ஒத்திவைப்புகாஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தற்கொலை செய்துக்கொண்ட காரணத்தால் அந்த வார்டுக்கு மட்டும் தேர்தல் நடைபெறமால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

சுகாதாரத்துறை அரசாணை எண் 151ஐ திரும்ப பெற வேண்டும்: டிடிவி வலியுறுத்தல்

தமிழ்நாடு மின் வாரியத்தில் காலி பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்: அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்

கலைஞர் பற்றி அவதூறு பாடல் பாடியவர்களின் மனோநிலை சாதாரண மனிதர்களின் தொனியல்ல அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே: கிருஷ்ணசாமி கண்டனம்