Wednesday, July 3, 2024
Home » காஞ்சி,செங்கை மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ஒருநாள் மழைக்கே சாலைகள் சேதம்

காஞ்சி,செங்கை மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ஒருநாள் மழைக்கே சாலைகள் சேதம்

by kannappan

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் அரசு அலுவலக ஊழியர்கள், தனியார் கம்பெனி பணியாளர்கள், கட்டிட வேலை செய்யும் கொத்தனார்கள், கூலித் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மழையால் காஞ்சிபுரம் சித்ரகுப்தன் கோயில் அருகில் சாலைஓரத்தில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி நின்றது. அதேபோன்று வைகுண்டபெருமாள் கோயில் தெரு, வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி, ஓரிக்கை, ஜெம் நகர் உள்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு கடுமையாக வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் மாலை வரை பெய்த மழை, கடந்த 100 ஆண்டுகளில் மார்கழி மாதத்தில் இதுபோன்று மழை பெய்ததில்லை என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் மழையால் பழைய மாமல்லபுரம் சாலையில் மழைநீர் தேங்கியது. இதன் மீது வாகனங்கள் செல்வதால் பழைய மாமல்லபுரம் சாலையில் படூர், ஏகாட்டூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், திருப்போரூர், இள்ளலூர் சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் தார் பெயர்ந்து சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. அதேபோல், திருப்போரூர் பேரூராட்சியில் ரவுண்டானாவில் இருந்து இள்ளலூர் சந்திப்பு வரை சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி சாலையா, பள்ளமா என தெரியாமல் பைக்கில் செல்பவர்கள், அதில் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். மேலும், இந்த பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் கனரக வாகனங்கள் இறங்கி செல்லும்போது, சாலையில் நடந்து செல்வோர் மீது தண்ணீர் விழுந்து, அவர்களது உடையும், உடமைகளும் நாசமாகின்றன. இதனால் சாலைகளில் வாகனங்களை ஒட்டி செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். இவ்வளவு நடந்தபோதிலும், மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஓஎம்ஆர் சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எட்டிப்பார்க்காத அவல நிலை உள்ளது. சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை பராமரிக்காததால் ஏகாட்டூர் சுங்கச்சாவடி, பெருங்குடி சுங்கச்சாவடி, படூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் நிற்கின்றன. எனவே, பழைய மாமல்லபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை கடம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 125 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. மழை பெய்தால், அங்குள்ள கால்வாய்கள் வழியாக இந்த ஏரிக்கு தண்ணீர் வரும். ஏரியின் நீரை கொண்டு கடம்பாடி சுற்றியுள்ள விவசாயிகள் பல ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரி தூர்வாரப்பட்டது. ஆனால், முறையாக சீரமைக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால், கடம்பாடி ஏரி மீண்டும் முழுமையாக நிரம்பியது. இதையொட்டி, கலங்கல் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறியது. இதனால், விவசாயிகள் வேதனையடைகின்றனர். செய்யூர்: செய்யூர் அடுத்த சின்ன களக்காடி கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இதன் மூலம் சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியில் 2 மதகுகள் மற்றும் ஒரு கலங்கல் உள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால், இந்த ஏரியில் 80 சதவீதம் வரை நீர் நிரம்பியது. இந்நிலையில், நேற்று அதிகாலையில், ஏரியின் 2வது மதகு உடைந்து, தண்ணீர் வெளியேறியது. இதையொட்டி, ஏரிக்கரை ஒட்டியுள்ள சுமார் 50 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இதுபற்றி கிராம மக்கள், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பரணி, பெக்லைன் இயந்திரம் மூலம் சேதமடைந்த மதகு பகுதியை தற்காலிகமாக சரி செய்தார். அதனை தொடர்ந்து கடந்த புயலின்போது தயார் நிலையில் வைக்கப்பட்ட மண் மூட்டைகளை கொண்டு உடைந்த பகுதியை சரி செய்தனர். மேலும், ஏரியின் பாதுகாப்பு நிலவரம் குறித்து வருவாய் துறையினர் ஆய்வு செய்கின்றனர். அதிகாரிகளின் இந்த துரித நடவடிக்கையால் அறுவடைக்காக காத்திருந்த 150 ஏக்கர் பயிர்கள் பாதுகாக்கப்பட்டன. இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற எம்எல்ஏ ஆர்.டி.அரசு பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, இனி இதுபோன்ற ஏரி உடைப்பு நிகழாத வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.90 சதவீத ஏரிகள் நிரம்பினகாஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில், 909 ஏரிகள் உள்ளன.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில், வையாவூர், நத்தப்பேட்டை, எறையூர், தாத்தனூர், குண்டுப் பெரும்பேடு, ஆரனேரி பெரிய ஏரி, செம்பாக்கம், நன்மங்கலம், புளிக்கொடு இடும்பன் ஏரி, கோலம்பாக்கம், எம்.என்.குப்பம் சித்தேரி, பட்டறை காலனி, உறையூர் ஏரி உள்பட 821 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.மேலும், 83 ஏரிகள் 75 சதவீதமும், 5 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் இந்த ஆண்டு விவசாயத்துக்கு போதிய நீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை 6 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் மி.மீட்டரில் :காஞ்சிபுரம்    41.60ஸ்ரீபெரும்புதூர்    105.20உத்திரமேரூர்    21.20வாலாஜாபாத்    20.00செம்பரம்பாக்கம்    135.40குன்றத்தூர்    139.70கண்டு கொள்ளாத  அதிகாரிகள்திருப்போரூர்  பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நடப்பதால், அதற்கு குழாய்  பதிப்பதற்காக ஓஎம்ஆர் சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு,  முறையாக மூடப்படாமல் உள்ளன. அதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து  பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும்,  நெடுஞ்சாலைத்துறையும், பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொள்ளும் கழிவுநீர்  அகற்று வாரியமும் கண்டு கொள்ளாமல் உள்ளன…

You may also like

Leave a Comment

three + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi