காஜிப்பூர் குப்பை கிடங்கு தீ பற்றிய சம்பவம் கிழக்கு டெல்லி மாநகராட்சிக்கு 40 லட்சம் அபராதம்: டிபிசிசி அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: காஜிப்பூர் குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்ததற்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்  அலட்சியம் காட்டியதே காரணம் என கூறி, கிழக்கு டெல்லி மாநகராட்சிக்கு 40 லட்சம் அபராதம் விதித்து டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தவிட்டுள்ளது. கிழக்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜிப்பூர் குப்பை கிடங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென தீ பற்றி எரியத்தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியதோடு,  காற்றுமாசு அதிகரித்து சுற்றுச்சூழலை பாதித்தது. இதையடுத்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு  அமைப்பின்(டிபிசிசி) குழு ஒன்று கிழக்கு மாநகராட்சி நிர்வகித்து வரும்  காஜிப்பூர் குப்பைட கிடங்கு இடத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அந்த  அறிக்கையில், குப்பை கிடங்கு இடத்தில் இதுபோன்ற தீவிபத்து சம்பவங்களைத்  தடுக்கத் தேவையான எந்த ஏற்பாட்டையும் மாநகராட்சி செய்யவில்லை என்று அதில்  கூறப்பட்டு இருந்தது. தற்போது கோடை காலம் என்பதால் குப்பை கிடங்குகளில் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளதால் அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சிகள் எடுக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும், இதில் மெத்தனம் காட்டப்பட்டுள்ளதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கண்டனம் தெரிவித்ததோடு, கிழக்கு மாநகராட்சியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், காஜிப்பூர் குப்பை கிடங்கு தீப்பற்றி எரிய அலட்சிய போக்கே காரணம் என கூறி, கிழக்கு மாநகராட்சிக்கு ₹40 லட்சம் அபராதம் விதித்து டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம்(டிபிசிசி) உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கிழக்கு மாநகராட்சிக்கு டிபிசிசி பிறப்பித்துள்ள உத்தரவில்,   ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 ஐ புறக்கணித்தது மட்டுமல்லாமல்,  திடக்கழிவு மேலாண்மை அல்லது குப்பை மேலாண்மை தொடர்பான விஷயங்களில் தேசிய  பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளையும் மீறியுள்ளது” என்று கூறியுள்ளது.இதுபற்றி அமைச்சர் கோபால்ராய் கூறுகையில், ‘‘கடந்த ஞாயிறன்று காஜிப்பூர் குப்பை கிடங்கின் ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. இதனால, அந்த பகுதியில் காற்றின்தரம் மோசமடைந்தது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் எந்தவொரு முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தின் அக்கறையின்மை தான் இந்த தீப்பற்ற காரணம்”என்றார்….

Related posts

சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்

மக்களவை தேர்தல் முடிவு மோடிக்கு தார்மீக தோல்வி: எதுவும் நடக்காதது போல் மோடி பாசாங்கு செய்கிறார்: சோனியா காந்தி விமர்சனம்

டெல்லி மழை பலி 8 ஆக உயர்வு