காசாங்காடு கிராமத்தில் தென்னையில் ஊடுபயிராக தக்கைப்பூண்டு சாகுபடி-வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு

பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரம், காசாங்காடு கிராமத்தில் வேப்பங்குளம் வேளாண் உதவி அலுவலர் கார்த்தி அறிவுரைப்படி, விவசாயி செந்தில்முருகன் தனது தென்னந்தோப்பில் ஊடுபயிராக தக்கைப்பூண்டு பயிரிட்டிருந்தார். ஊடுபயிர் பயிரிட்டு 45 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி ஆகியோர் செந்தில்முருகன் தென்னந்தோப்பை பார்வையிட்டனர்.அப்போது வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி கூறுகையில்,காசாங்காடு தென்னை விவசாயி செந்தில்முருகன் தக்கைப் பூண்டு விதைப்பின்போது வேளாண் விரிவாக்க மையத்திலிருந்து பசுந்தாள் உர விதைகளை 50 சத மானியத்தில் பெற்று தோப்பில் விதைத்ததன் மூலம் யூரியாஉரம் இடுவதற்கான செலவு குறைந்துள்ளதோடு, நன்மை செய்யும் பூச்சிகளான ஊசித்தட்டான், குளவி போன்றவைகளின் எண்ணிக்கை அதிகரித்து தீமை செய்யும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.எனவே தென்னை விவசாயிகள் அனைவரும் வயலில் இருக்கும் ஈரத்தை பயன்படுத்தி தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை விதைத்து மண்ணின் நலத்தை அதிகரிக்க வேண்டும் என்றார். இதுகுறித்து விவசாயி செந்தில்முருகன் கூறுகையில், தக்கைப்பூண்டு பயிரிடுவதால் உரச்செலவு குறைந்து, மண்ணில் நீர் பிடிப்புத்தன்மை மற்றும் காற்றோட்டம் அதிகரித்துள்ளது என்றார். இந்தஆய்வின்போது சிசி பணியாளர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்….

Related posts

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு