கவிஞர் மீராவுக்கு நினைவு மண்டபம்தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள்

சிவகங்கை, செப்.3:சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களான கனியன் பூங்குன்றனார், ஒக்கூர் மாசாத்தியார், சுத்தானந்த பாரதி, முடியரசன், கண்ணதாசன் போன்ற புகழ்பெற்ற கவிஞர்களுள் மீராவும் ஒருவர். சிவகங்கையை சேர்ந்த மீ.ராஜேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட இவருடைய நூல்கள் கடந்த 2009ம் ஆண்டு அரசுடைமை ஆக்கப்பட்டது.சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலை கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றிய மீராவின் நூல்களுள் ஊசிகள், கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் போன்றவை புகழ்பெற்ற நூல்களாகும். மரபுக்கவிதையில் இருந்து புதுக்கவிதைகளை தமிழ் இலக்கியத்துக்கு தந்தவர்களில் மீரா குறிப்பிடத்தக்கவர். இவருடைய கவிதைகளும், கட்டுரைகளும் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இவர் காமராசர் பல்கலைக்கழக தமிழ்த்துறை பாடத்திட்டக் குழுத்தலைவராக இருந்தபோதுதான் தந்தை பெரியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் ஆகியோரின் படைப்புகளை பாடத்திட்டத்தில் இடம்பெற செய்தார்.

தமிழாசிரியர் இளங்கோ கூறியதாவது:தங்களுடைய கவிதைகளை புத்தகமாக உருவாக்க முடியாத பொருளாதார வசதியின்றி தவித்த ஏராளமான கவிஞர்களின் கவிதைகளை தன்னுடைய அகரம் அச்சகத்தின் மூலம் புத்தகமாக அச்சிட்டு வழங்கியவர் மீரா. இதன்மூலம் அந்த காலக்கட்டத்தில் ஏராளமான புதுக்கவிதைகளும், கவிஞர்களும் வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். 2002ம் ஆண்டு மீரா இறந்தபோது சிவகங்கையில் அவருக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்காக அப்துல்ரகுமான், சிற்பி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்தப் பணிகளும் நடக்கவில்லை. எனவே சிவகங்கையில் மீராவிற்க்கு நினைவு மண்டபம் எழுப்பவேண்டும். நினைவிடத்தில் அவருடைய நூல்களை கொண்ட நூலகம் அமைக்க வேண்டும். சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசுக்கல்லூரி தமிழ் உயராய்வு மையத்திற்கு மீராவின் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு