கவர்னர், அமைச்சர் ஆய்வு செய்ததோடு சரி… பழுதான செல்லிப்பட்டு படுகை அணையை புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருக்கனூர் : திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை உள்ளது. இந்த அணை கட்டி 50 ஆண்டுகள் கடந்துவிட்டது. படிப்படியாக அணையின் தரம் குறைந்து, சுண்ணாம்பு காரைகள் பெயர்ந்து செங்கற்கள் தெரிந்தவாறு இருந்துவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அணையில் தண்ணீர் நிரம்பி இயற்கை சூழலில் சுற்றுலாத்தளம் போல் காட்சியளித்தது. குறிப்பாக மழை காலங்களிலும் இந்த அணையில் மக்கள் பொழுதுபோக்கிற்காக குடும்பத்துடன்  குளித்து மகிழ்ந்து வந்தனர். ஆனால், அணை பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் உடையும் அபாயத்தில் இருந்து வந்தது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் பல்வேறு ஏரி, குளங்கள் அணைகள் நிரம்பி வந்தன. அதில் இந்த அணையும் நிரம்பியது.   இந்நிலையில் அணை உடையும் அபாயத்தில் இருப்பது குறித்து பொதுமக்கள் அரசுக்கு புகார் மனு அனுப்பியிருந்தனர். இதையடுத்து, கவர்னர் தமிழிசை, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநராயணன், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் ஆகியோர் பார்வையிட்டு புதியதாக நிதி ஒதுக்கீடு செய்து அணை கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதன் பிறகு, அணையும் இடிந்து விழுந்தது. இதனால் நீரை தேக்கி வைக்க முடியாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் குடிநீர் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக உடைந்த அணையை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

சென்னை, தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றம்: மாநகராட்சி அறிக்கை

கோடம்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மேயர் பிரியா ஆய்வு