கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலம்

 

கழுகுமலை, ஜன. 26: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தமிழகத்தின் தென்பழநி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவறை கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல், விளா, காலசந்தி பூஜைகள் மற்றும் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, மகா தீபாராதனை நடந்து வருகிறது. காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் தைப்பூசத் தினமான நேற்று (26ம் தேதி) கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமாள் கோ ரதத்திலும் எழுந்தருளினர்.

10.30 மணிக்கு மேல் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன்,பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செயல் அலுவலர் கணேசன், பேரூராட்சி உறுப்பினர் ஜெயக்கொடி, திமுக பேரூர் செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களுடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தெற்கு ரதவீதி, கீழ பஜார் வழியாக மதியம் 12 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியருளித்தனர். தைப்பூசத்தையொட்டி கோவில்பட்டி, எட்டயபுரம், சங்கரன்கோவில், சிவகாசி, ராஜபாளையம், வில்லிபுத்தூர், மற்றும் பல்வேறு ஊர்களில் மக்கள் பாதயாத்திரையாக கழுகுமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோயில் பணியாளர்கள், சீர்பாத தாங்கிகள் செய்திருந்தனர்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்