கழுகுமலை அருகே ஓராண்டாக குடிநீர் விநியோகம் ‘கட்’ -கிராம மக்கள் பரிதவிப்பு

கழுகுமலை : கழுகுமலை அருகே கடந்த ஓராண்டாக குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீவலப்பேரி குழாயில் உள்ள அடைப்பை அகற்ற நிதி ஆதாரமில்லை என பஞ்சாயத்து கைவிரித்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.கழுகுமலை அருகே உள்ள தெற்கு கழுகுமலை பஞ்சாயத்து, கயத்தாறு யூனியனுக்குட்பட்டது. இப்பஞ்சாயத்தில் தெற்கு கழுகுமலை, துலுக்கர்பட்டி, கூழைத்தேவன்பட்டி ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்துக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கழுகுமலை அருகே காலாங்கரைப்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ளது. கூழைத்தேவன்பட்டியில் சுமார் 1500 மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண்கள் தீப்பெட்டி ஆலைகளுக்கும், ஆண்கள் கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக கூழைத்தேவன்பட்டி கிராமத்துக்கு மட்டும் சீவலப்பேரி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இக்கிராம மக்கள், விலை கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஒரு குடம் ரூ.10க்கு வாங்குகின்றனர். கூழைத்தேவன்பட்டிக்கு குடிநீர் கொண்டு வரப்படும் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக குடிநீர் விநியோகிக்க முடியவில்லை என பஞ்சாயத்து நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கூழைத்தேவன்பட்டியை சேர்ந்த காளியம்மாள் கூறுகையில், “காலாங்கரைப்பட்டி நீர்த்தேக்க தொட்டியில் இருந்து காலாங்கரைப்பட்டி, கெச்சிலாபுரம், சுப்பிரமணியாபுரம், புதூர், வேலாயுதபுரம், கூழைத்தேவன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த கிராமங்களுக்கு தினசரி சீவலப்பேரி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதில் வீட்டுக்கு 2 குடங்கள் குடிநீர் எடுத்துக்கொள்வோம். ஆனால், கடந்த ஓராண்டாக எங்கள் கிராமத்துக்கு மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.இதுகுறித்து பஞ்சாயத்தில் முறையிட்டால், குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை கண்டறிந்து, அடைப்பை அகற்ற நிதி ஆதாரம் இல்லை என கைவிரிக்கின்றனர். ஏற்கனவே நாங்கள் கூலித்தொழில் பார்த்து சிரமப்பட்டு வருகிறோம். இதில் தினமும் ரூ.20 கொடுத்து 2 குடங்கள் குடிநீர் எடுத்தால், மாதம் இதற்கு மட்டும் ரூ.600 வரை செலவாகிறது. எங்களது ஏழ்மை நிலையில், இது கூடுதல் சுமையாக உள்ளது. அதிலும், அவர்கள் வரும் நேரம் வரை காத்திருந்து தான் தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்களது வேலையும் பாதிக்கிறது. மேலும் எங்கள் கிராமத்தின் பிரதான சாலையில் மட்டும் ஒரே ஒரு வாறுகால் தான் உள்ளது. மற்ற தெருக்களில் வாறுகால் கிடையாது. இதனால் வீட்டின் முன்பே சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலை நீடிக்கிறது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்றனர்.‘‘விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை” கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) பானு கூறுகையில், கூழைத்தேவன்பட்டி கிராம மக்களின் கோரிக்கை, எனது கவனத்துக்கு தற்போதுதான் வந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து, குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். …

Related posts

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்