கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

 

நாமக்கல், டிச.12: குமாரபாளையம் தாலுகா எலந்தக்குட்டை கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று டிஆர்ஓ சுமனிடம் ஒரு மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: எலந்தக்குட்டை கிராமம் ஈ.காட்டூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் பாசன வசதி பெற்று, 1,000 ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள குமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான 20.34 ஏக்கர் நிலத்தில் 2.50 ஏக்கரில், அரசு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பைகளை கொட்டி எரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளனர்.

இந்த திட்டம் அமைய உள்ள இடத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் ஓடை வழியாக வரும் தண்ணீரில் ஈ.காட்டூர், தெற்குப்பாளையம், புதூர், தார்க்காடு,சின்னாக்கவுண்டன்பாளையம், குள்ளமேடு, கொள்ளுப்பாறைக்காடு, குறுவன்காடு, வெடியரசம்பாளையம் ஆகிய பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நெல், கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. மேலும், 10 மீட்டர் தூரத்தில் மேட்டூர் கிழக்கு கரை பாசன வாய்க்கால், 300 மீட்டர் தூரத்தில், இயற்கை சிகிச்சை மருத்துவமனை, பள்ளிக்கூடம், விவசாய கிணறுகள், ஆழ்துளை குழாய் கிணறுகள், நீர் நிலைகள் அமைந்துள்ளன.இந்த திட்டத்தை கொண்டு வந்தால், வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் அனைத்து விவசாய பகுதிகளும், குடியிருப்பு பகுதிகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பைகளை கொட்டி எரிக்கும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

இளம்பெண் திடீர் உயிரிழப்பு

ராஜபாளையம் மகளிர் கல்லூரியில் பிரபஞ்ச அறிவியல் சிறப்புரை

குற்ற சம்பவங்களை தடுக்க சொந்த செலவில் சிசிடிவி பொருத்திய இளைஞர்கள்